செய்திகள்

நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை - கோவை குற்றாலம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

Published On 2018-08-09 15:41 IST   |   Update On 2018-08-09 15:41:00 IST
நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்வதை தொடர்ந்து கோவை குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இன்று சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
கோவை:

கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.

நேற்று காலை நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. ஊட்டி, குந்தா, கூடலூர் பகுதியில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.

பலத்த மழை காரணமாக கூடலூர், குந்தா பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பிறப்பித்துள்ளார்.

மழை காரணமாக இன்று ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இதனால் அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

கோவை மாவட்டத்தில் நேற்று காலை முதல் மழை பெய்து வருகிறது. கோவையில் நேற்று இரவும் மழை பெய்தது. இன்று காலை பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

வால்பாறையில் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்தது. இன்று 2-வது நாளாக மழை நீடித்தது. இதனால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. வால்பாறையில் உள்ள சோலையாறு அணைக்கு தற்போது வினாடிக்கு 6300 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 6100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் 162 அடி தண்ணீர் உள்ளது.

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த மாதம் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கோவை குற்றாலம் அருவிக்கு நீர் வரத்து அதிகரித்தது. அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இந்த தடை நீடித்தது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை குறைந்து கடந்த 2 நாட்களுக்கு முன் கோவை குற்றாலம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

நேற்று தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி விடுமுறை என்பதால் கோவை குற்றாலத்திற்கு செல்ல அனுமதி வழங்கவில்லை.

இந்த நிலையில் நேற்று முதல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்வதை தொடர்ந்து கோவை குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இன்று சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கோவை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு-

பீளமேடு ஏர்போர்ட் -4, பொள்ளாச்சி -75, பெரிய நாயக்கன் பாளையம்- 10, சூலூர் -5.20, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் - 12, சின்கோனா- 135, சின்னக் கல்லார் - 116, வால்பாறை பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் - 73, வால்பாறை தாலுகா அலுவலகம் - 89, கோவை தெற்கு -12.

அதிகபட்சமாக வால்பாறை சின்கோனா பகுதியில் அதிக மழை பெய்துள்ளது.

Tags:    

Similar News