செய்திகள்

ஈரோடு ரெயில் நிலையத்தில் பிளாட்பார மேற்கூரை இடிந்து விழுந்தது - 4 பேர் காயம்

Published On 2018-08-07 05:42 GMT   |   Update On 2018-08-07 05:42 GMT
ஈரோடு ரெயில் நிலையத்தில் பிளாட்பார மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
ஈரோடு:

ஈரோடு ரெயில் நிலையம் வழக்கம் போல் இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.

ஈரோடு-சென்னை ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை சென்னையில் இருந்து காலை 6.30 மணியளவில் ஈரோடு ரெயில் நிலையத்தில் வந்து நின்றது. பயணிகள் இறங்கி சென்று கொண்டிருந்தனர். 4-வது பிளாட்பார்ம் மற்றும் 3-வது பிளாட்பார்முக்கு இடைப்பட்ட ‘சப்-வே’ வழியில் பயணிகள் வேகமாக இறங்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பிளாட்பார்மின் மேற்கூரை கான்கிரீட் தளத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து கீழே விழுந்தது.

அப்போது அந்த வழியாக நடந்து சென்ற ஈரோடு என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி பானுமதி (வயது 42) என்பவரது தலையில் விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேலும் மேற்கூரையின் கான்கிரீட் பகுதி இடிந்து விழுந்ததில் நடந்து சென்ற மேலும் 3 இளைஞர்கள் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் இன்று காலை ஈரோடு ரெயில் நிலையத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவ இடத்துக்கு ஈரோடு ரெயில்வே போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.
Tags:    

Similar News