செய்திகள்

முத்துப்பேட்டை அருகே குளத்தில் வீசப்பட்ட ஐம்பொன் சாமி சிலை மீட்பு- போலீசார் விசாரணை

Published On 2018-08-04 16:08 GMT   |   Update On 2018-08-04 16:08 GMT
முத்துப்பேட்டை அருகே சாக்கில் சுற்றி குளத்தில் வீசப்பட்ட ஐம்பொன் சாமி சிலை கோவிலில் கொள்ளையடிக்கப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டை அருகே நாச்சிக்குளம் பகுதியை சேர்ந்தவர் செய்யது மகன் சாகுல்அமீது. இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் வடக்கு செருமனையூரில் நிலங்கள் மற்றும் குளம், தோப்பு உள்ளது. இந்நிலையில் சாகுல்அமீது இன்று குளத்தின் கரையில் உள்ள தென்னை மரங்களில் உள்ள தேங்காய்களை பறிப்பதற்காக முத்துவேல் என்ற தொழிலாளியை அழைத்து சென்றார்.

பின்னர் தேங்காய்களை பறித்து விட்டு முத்துவேல் அங்குள்ள குளத்திற்கு கை,கால்களை கழுவ சென்றார். குளத்தில் சிறிதளவே தண்ணீர் தேங்கி இருந்துள்ளது. அப்போது தண்ணீரில் அவரது காலில் ஏதோ தட்டுப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் அதனை இழுத்து பார்த்தபோது அது சாக்குமூட்டை என்பது தெரியவந்தது. பின்னர் அந்த சாக்குமூட்டையை கரைக்கு கொண்டு வந்து அதனை சாகுல் அமீதும், முத்துவேலும் பிரித்து பார்த்தனர். அப்போது அதற்குள் 2 அடி உயரமுள்ள ஐம்பொன்னால் ஆன சாமி சிலை இருப்பது தெரிந்தது. அந்த சிலை நடராஜர் சிலைபோல் இருந்துள்ளது. மேலும் சிலையின் வலது பக்க கை மற்றும் கால் இல்லாமல் பின்னமாக இருந்தது தெரியவந்தது.

உடன் இதுபற்றி சாகுல்அமீது திருத்துறைப்பூண்டி தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வருவாய் ஆய்வாளர் தங்கதுரை, முத்துப்பேட்டை டி.எஸ்.பி., இனிகோதிவ்யன், இன்ஸபெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வந்து சிலையை கைப்பற்றி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் போலீசார் இந்த சிலையை யார் சாக்கில் சுற்றி கொண்டு வந்து குளத்தில் வீசி சென்றது? என்றும், அப்பகுதி கோவிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சிலையா? என்றும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளத்தில் சாமி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
Tags:    

Similar News