செய்திகள்

மறுகூட்டல் முறைகேடு - அண்ணா பல்கலைக்கழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

Published On 2018-08-04 07:48 GMT   |   Update On 2018-08-04 07:48 GMT
விடைத்தாள் மறுகூட்டல் முறைகேடு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். #RevaluationScam #AnnaUniversityRaid
சென்னை:

அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறுகூட்டலில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், லஞ்சம் பெற்றுக்கொண்டு அதிக அளவில் மதிப்பெண்களை வழங்கியிருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிக மதிப்பெண்கள் போடுவதற்கு ஒவ்வொரு மாணவனிடம் இருந்தும் தலா ரூ.10 ஆயிரம் பெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதிக மதிப்பெண்கள் பெற்ற சுமார் 90 ஆயிரம் பேரில் பாதி பேர் பணம் கொடுத்து மதிப்பெண் பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது. அதன்படி கணக்கிட்டால் அந்த ஒரு செமஸ்டரில் மட்டும் சுமார் 40 முதல் 45 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.



இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உமா சேர்க்கப்பட்டுள்ளார். மண்டல முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், உதவி பேராசிரியருமான விஜயகுமார், மண்டல முன்னாள் அதிகாரி சிவக்குமார் ஆகிய இருவரும் 2-வது, 3-வது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். லஞ்சம் கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று சோதனை நடத்தினர்.  இந்த சோதனையின்போது, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்த ஏராளமான விடைத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், தற்போதைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விசாரணை வளையம் விரிவடையும் பட்சத்தில், மேலும் கல்லூரிகள் சிக்க வாய்ப்புள்ளது. அப்போது ஊழலில் ஈடுபட்ட பேராசிரியர்கள், இடைத்தரகர்கள் அதிக அளவில் சிக்கலாம். #RevaluationScam #AnnaUniversityRaid
Tags:    

Similar News