செய்திகள்

பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்ல அனுமதி பெறாத வாகனங்களுக்கு அபராதம்

Published On 2018-08-01 17:34 IST   |   Update On 2018-08-01 17:34:00 IST
பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்ல சிறப்பு அனுமதி பெறாத ஆட்டோ, வேன்களுக்கு வட்டார போக்குவரத்து பறக்கும் படை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
திருச்சி:

திருச்சி மண்டல போக்குவரத்து இணை ஆணையர் சிவகுமார் உத்தரவின்பேரில் பறக்கும் படை வட்டார போக்குவரத்து அதிகாரி கணேஷ் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நெடுஞ்செழிய பாண்டியன், முகமது மீரா, குணசேகரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் திருச்சி மேலப்புதூர் சுரங்கப்பாதை அருகில் வாகன ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். குறிப்பாக பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ, வேன்களை அதிரடியாக நிறுத்தி சோதனை செய்யப்பட்டன.

அப்போது பல ஆட்டோ மற்றும் வேன்கள் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்வதற்கான சிறப்பு அனுமதி பெறாமல் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சில வாகனங்களில் அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றி சென்றதும், முறையான தகுதிச்சான்று பெறாமல் இருந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக பிடிபட்ட ஆட்டோக்கள், வேன்களுக்கு சுமார் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் கார், ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்களை இயக்குபவர்கள் அதற்குரிய சிறப்பு அனுமதி சீட்டினை பெற்றிருக்க வேண்டும். அப்படி பெறாத வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்று அனுமதி சீட்டினை பெற்றுக்கொள்ளும்படி பறக்கும் படை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். #tamilnews
Tags:    

Similar News