செய்திகள்

கவர்னர் கிரண்பேடி மீது காங்கிரஸ் உரிமை மீறல் புகார்

Published On 2018-08-01 09:56 GMT   |   Update On 2018-08-01 09:56 GMT
அதிகார வரம்பை தவறாக பயன்படுத்தி வரும் கவர்னர் கிரண்பேடி மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புகார் கொடுத்துள்ளனர்.
புதுச்சேரி:

புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், தீப்பாய்ந்தான், பாலன், ஜெயமூர்த்தி, தனவேலு, அனந்தராமன், விஜயவேணி ஆகியோர் சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் ஒரு உரிமை மீறல் புகார் கொடுத்துள்ளனர்.

புதுவை கவர்னர் சட்டப்பேரவையின் சுதந்திரத்தையும், மாண்பையும் குலைக்கும் வகையில் நீண்ட நாட்களாக பேசி வருகிறார்.

மத்திய அரசு தன்னிச்சையாக 3 உறுப்பினர்களை நியமித்ததையடுத்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவைப்பற்றி கருத்து தெரிவிக்கையில், அந்த 3 பேரையும் நியமன உறுப்பினர்களாக அங்கீகரித்து சட்டசபை கூட்டத்தொடரில் கலந்து கொள்ள அனுமதிக்காவிட்டால் சட்ட சிக்கலையும், பின்விளைவுகளையும் சந்திக்க நேரிடும் என சட்டப்பேரவைக்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர்கள் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளும்பட்சத்தில்தான் நிதி மசோதா தாக்கல் செய்ய அனுமதித்துள்ளேன் என நிபந்தனையும் விதித்திருப்பது சட்டப்பேரவையின் தனித்தன்மையை, சுதந்திர தன்மையை கேலிக்குரியதாக்கி தரம் தாழ்த்துவதாக உள்ளது.

அதோடு சட்டத்தை இயற்றுபவர்களே சட்டத்தை மீறுபவர்கள் என்று பொதுமக்களின் மனதில் தவறான எண்ணத்தையும் உருவாக்கியுள்ளார்.

இது, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் மாண்பையும், உரிமையையும் பாதிப்பிற்குள்ளாக்கி உள்ளது. ஒட்டுமொத்தமாக சபையின் கண்ணியத்தையும், மாண்பையும் வேண்டுமென்றே தாழ்த்தி அவதூறாக பேசியும் சபையை அவமதித்தும் வருகிறார்.

நிலுவையில் உள்ள ஒரு வழக்கு பற்றி இடைக்கால உத்தரவில் தன் இஷ்டம்போல விளக்கம் அளிக்கிறார். சட்டசபையை தன் ஆளுகைக்கு கீழ் செயல்படும் ஒரு துறையை போல கருதி உத்தரவிடுவது சபையை அவமதிக்கும் செயலாகும்.

எனவே உறுப்பினர்களின் புகாரை ஏற்று கவர்னர் மீது உரிமை மீறல் நடவடிக்கை மற்றும் சபை அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

இவ்வாறு அந்த புகாரில் கூறியுள்ளனர்.
Tags:    

Similar News