செய்திகள்

கருணாநிதி உடல் நலக்குறைவால் கவலை- நெல்லையில் தீக்குளித்த தி.மு.க. தொண்டர் மரணம்

Published On 2018-08-01 09:30 GMT   |   Update On 2018-08-01 09:30 GMT
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் நெல்லையில் தீக்குளித்த தி.மு.க. தொண்டர் பலியானார். #DMK
நெல்லை:

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு மற்றும் வயோதிகம் காரணமாக சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முன்தினம் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் தமிழகம் முழுவதும் பல தி.மு.க. தொண்டர்கள் தற்கொலை செய்தும், அதிர்ச்சியிலும் பலியானார்கள்.

துத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கான்சாபுரத்தை சேர்ந்த தி.மு.க. தொண்டரும், வார்டு உறுப்பினருமான செல்வக்குமார் (வயது 42) என்பவர் நேற்று முன்தினம் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நெல்லை மாவட்டம் குருவிகுளம் அருகே உள்ள பிச்சை தலைவன் பட்டியைச் சேர்ந்த தி.மு.க. தொண்டரும், முன்னாள் கிளை செயலாளருமான கோயில்பிள்ளை (75) என்பவர் கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு என்று கேள்விபட்டதும் அதிர்ச்சியில் மரணம் அடைந்தார்.

பாளை என்.ஜி.ஓ. காலனியை அடுத்த திருநகரை சேர்ந்தவர் சங்கர் (50). தீவிர தி.மு.க. தொண்டரான இவர் சமையல் வேலை செய்து வந்தார். கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது முதல் வேலைக்கு செல்லாமல் எப்போதும் டி.வியையே பார்த்துக்கொண்டு இருந்தார்.

மனைவி பேச்சியம்மாள் மற்றும் உறவினர்களிடம், என்தலைவருக்கு இப்படி ஆகிவிட்டதே இனி அவரது பேச்சை கேட்க முடியாது என்று கண்கலங்கி கூறி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை திடீரென்று அவர் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்தார். வேதனையிலும், தி.மு.க. வாழ்க, கலைஞர் வாழ்க என்று கத்தினார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த அவரது மனைவி பேச்சியம்மாள் மற்றும் அருகில் உள்ளவர்கள், சங்கரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். 90 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் ஏற்பட்டதால் கவலைக்கிடமான நிலையில் இருந்த சங்கருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலன் அளிக்காமல் சங்கர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மரணம் அடைந்த சங்கர் உடலுக்கு இன்று நெல்லை மாவட்ட தி.மு.க பிரமுகர்கள் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் எம்.எல்.ஏ, மத்திய மாவட்ட கழக செயலாளர் அப்துல் வகாப், மாநகர செயலாளர் ஏ.எல்.எஸ் லட்சுமணன் எம்.எல்.ஏ மற்றும் ஏராளமான நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர். மரணம் அடைந்த சங்கரின் மனைவி பேச்சியம்மாளை சந்தித்தும் அவர்கள் ஆறுதல் கூறினர். #DMK
Tags:    

Similar News