செய்திகள்

சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ வசம் ஒப்படைக்க கொள்கை முடிவு - ஐகோர்ட்டில் அரசு தகவல்

Published On 2018-08-01 06:40 GMT   |   Update On 2018-08-01 06:40 GMT
பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவின் விசாரணையில் திருப்தி இல்லாததால் சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. #IdolSmugglingCases #PonManickavel
சென்னை:

சிலைக் கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரணை நடத்தி பல்வேறு சிலைகளை மீட்டுள்ளது. ஆனால் மாநில அரசுக்கும் அவருக்கும் இடையே சமீப காலமாக உரசல் போக்கு இருந்து வருகிறது. அரசிடம் இருந்து தனக்கு அழுத்தம் வருவதாகவும், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்றும் பொன்.மாணிக்கவேல் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், சிலை கடத்தல் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிலை கடத்தல் வழக்குகள் அனைத்தையும் சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.



பொன்.மாணிக்கவேல் குழுவினரின் விசாரணையில் திருப்தி இல்லை என்றும், ஓராண்டாக ஒரு விசாரணை அறிக்கையை கூட தாக்கல் செய்யவில்லை என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. தமிழக அரசின் குற்றச்சாட்டுக்கு பொன்.மாணிக்கவேல் தரப்பு வழக்கறிஞர் கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.

இதையடுத்து அரசின் கொள்கை முடிவுகளை ஆகஸ்ட் 8-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது. #IdolSmugglingCases #PonManickavel
Tags:    

Similar News