செய்திகள்

செல்போன் டவர் அமைப்பதை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை

Published On 2018-07-28 06:56 GMT   |   Update On 2018-07-28 06:56 GMT
ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் டவர் அமைப்பதை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புறம் ஊராட்சியில் சுமார் 5 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் மாதா கோவில் தெரு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் புதிதாக செல் போன் டவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

குடியிருப்பு பகுதி மத்தியில் செல்போன் டவர் அமைத்தால் அதில் இருந்து வரும் கதிர்வீச்சு மூலம் பொதுமக்களுக்கு புற்று நோய், கர்ப்பிணி பெண்களுக்கு சிசு பாதிப்பு, ஆண்மை குறைவு போன்றவை ஏற்படுவதோடு விலங்கு மற்றும் பறவைகள் அழிந்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

மேலும் டவர் அமைக்கும் இடத்திற்கு அருகே பள்ளிக் கூடம், அங்கன்வாடி உள்ளதால் இந்த இடத்தில் செல்போன் டவர் அமைக்க அனுமதிக்ககூடாது என கிராம மக்கள் மாவட்ட கலெக்டர், கோட்டாட்சியர், சுகாதாரத்துறை, மாசு கட்டுப்பாட்டு துறை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, வட்டாட்சியர் மற்றும் தலைமை செயலகம் உள்ளிட்டோருக்கு மனு அளித்துள்ளனர்.

மேலும் செல்போன் டவர் அமைக்கப்படும் இடத்தில் பொதுமக்கள் திரண்டு முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 2014-ம் ஆண்டு வளர்புறம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செல்போன் டவர் அமைக்ககூடாது என ஊராட்சி மன்றத்தின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வளர்புரம் ஊராட்சியில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் செல்போன் டவர் அமைத்தால் கிராம மக்கள் ஒன்றாக திரண்டு மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர். #tamilnews
Tags:    

Similar News