செய்திகள்

கோரிக்கைகள் நிறைவேறாததால் போக்குவரத்து ஊழியர்கள் மீண்டும் வேலைநிறுத்தம்

Published On 2018-07-26 08:32 GMT   |   Update On 2018-07-26 08:32 GMT
ஊதிய உயர்வு, நிலுவை தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேறாததால் போக்குவரத்து ஊழியர்கள் மீண்டும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
சென்னை:

போக்குவரத்து கழக ஊழியர்கள் ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இது தற்போது நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் நாளை மறுநாள் போக்குவரத்து தொழிலாளர்கள் சென்னை பல்லவன் இல்லம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

போக்குவரத்து கழகத்தில் ஏற்படும் இழப்பை அரசு ஏற்க வேண்டும். பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட்டு, உரிய ஊதியத்தையும், பதவி உயர்வையும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிர்வாக இயக்குனர்களுக்கு அனுப்பினோம். இதில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது. இதனால் ‘ஸ்டிரைக்’ நோட்டீஸ் கொடுத்தோம்.

அதன்பிறகு 2 கட்ட பேச்சுவார்த்தை நடத்திய தொழிலாளர் நல அலுவலர்கள் பெரும்பாலான கோரிக்கைகளுக்கு வழக்கு நிலுவையில் உள்ளதாக காரணம் கூறிவிட்டனர்.

இதனால் மண்டல அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் செய்து தொழிலாளர்களுக்கு நிலைமையை எடுத்துக் கூறி உள்ளோம்.

இந்த நிலையில் நாளை மறுநாள் சென்னையில் மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இதில் வேலைநிறுத்தம் பற்றி அறிவிக்க இருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News