செய்திகள்

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2018-07-25 17:38 GMT   |   Update On 2018-07-25 17:38 GMT
கரூரில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் கல்லூரி மாணவ- மாணவிகள் பலர் பங்கேற்றனர். #WorldPopulationDay
கரூர்:

மக்கள் தொகைப்பெருக்கத்தின் விளைவினால் சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் ஜூலை 11-ம் நாள் உலக மக்கள் தொகை தினமாக அனுசரிக்கப்படும் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலமானது தாந்தோன்றிமலை பகுதியிலுள்ள வீதி வழியாக சென்று அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நிறைவு பெற்றது. இதில் அரசு கலைக்கல்லூரி மற்றும் செவிலியர் கல்லூரி உள்பட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் பதாகைகள் ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் சென்றனர்.

அதனை தொடர்ந்து தாந்தோணியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற மக்கள் தொகை தின கருத்தரங்கில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்த ஆண்டு நாம் 29-வது உலக மக்கள் தொகை தினத்தை அனுசரிக்கின்றோம். ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருத்தை மையமாக வைத்து அனுசரிக்கின்றோம். இந்த ஆண்டு “சிறு குடும்பமே ஓர் அர்த்தமுள்ள எதிர்கால, ஆரம்பத்திற்கு உறுதுணை” என்ற கருத்தை அடிப்படையாக கொண்டு உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்படுகின்றது. பெண்களின் குடும்ப சுமையை குறைத்து நாடு நலம் பெற சிறு குடும்ப நெறியை பின்பற்றி பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஆண்களும் ஒத்துழைக்க வேண்டும். கல்வியறிவு அனைவருக்கும் அவசியம். அதிலும் பெண் கல்வி மிகவும் அவசியம். சிறுகுடும்பமே சீரான வாழ்வு என்பதற்கேற்ப குடும்பத்தை வழிநடத்தி நாட்டின் வளர்ச்சிக்கு துணை புரிய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் அன்பழகன் வாசிக்க அனைவரும் அவரைப்பின் தொடர்ந்து திரும்பக்கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், வருவாய் கோட்டாட்சியர் கரூர் சரவணமூர்த்தி, மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலம் துணை இயக்குனர் எலிசபெத்மேரி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனந்தநாராயணன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ஜெயந்தி, பாலசுப்ரமணியன், வட்டாட்சியர் கலியமூர்த்தி, மாவட்ட கல்வி இயலாளர் பாலமோகனா உள்பட பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News