செய்திகள்

அரக்கோணம் அருகே மண் கடத்தல்- கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய 3 பேர் சிக்கினர்

Published On 2018-07-25 10:29 GMT   |   Update On 2018-07-25 10:29 GMT
அரக்கோணம் அருகே மண் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தக்கோலம்:

அரக்கோணம் அருகே கீழாந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளியாங்குப்பம், மதுரா பகுதியில் உள்ள மின்னலம்மன் கோவில் அருகே குளத்தில் மண் அள்ளப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார், சிப்பந்தி ஜெயபால் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் இருவரும் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, 5 டிராக்டரில், 2 பொக்லைன் எந்திரம் மூலமாக கிராவல் மண் எடுத்து கொண்டு இருந்தனர்.

கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார், மண் அள்ளி கொண்டிருந்தவர்களிடம் மண் எடுப்பதற்கு அனுமதி வாங்கி உள்ளீர்களா? என்று கேட்டு உள்ளார். அப்போது மண் எடுத்து கொண்டு இருந்தவர்கள் அனுமதி எதுவும் வாங்கவில்லை என்று கூறி உள்ளனர்.

அப்படியென்றால் மண் எடுப்பது குற்றமாகும். எனவே டிராக்டர், பொக்லைன் எந்திரங்களை போலீஸ் நிலையத்திற்கு எடுத்து வாருங்கள் என்று கூறி உள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலருக்கும், மண் எடுத்து கொண்டிருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

பின்னர் கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார் டிராக்டரில் இருந்த சாவியை எடுத்து கொண்டு போலீஸ் நிலையம் வாருங்கள் என்று கூறியபோது மண் எடுத்த நபர்கள் அருண்குமாரின் கையில் இருந்த சாவியை பிடுங்கிக்கொண்டு, அவரை தாக்கி கீழே தள்ளியுள்ளனர். உடனே அவர்கள், டிராக்டரை எடுத்து செல்ல முயன்றபோது சிப்பந்தி ஜெயபால் தடுத்து உள்ளார்.

இதனையடுத்து சிப்பந்தியை, மண் கடத்தல்காரர்கள் மார்பில் குத்தி அவரின் சட்டையை கிழித்து உள்ளனர். மேலும் அவர்கள், அவரது கையை சாவியால் கிழித்து உள்ளனர். பின்னர் அருண்குமார், ஜெயபால் இருவரையும் தாக்கி விட்டு மண் கடத்தல்காரர்கள் அங்கிருந்து டிராக்டர், பொக்லைன் எந்திரங்களை எடுத்து கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து அருண்குமார் அரக்கோணம் தாசில்தார் பாபு மற்றும் வருவாய் ஆய்வாளர் ரஜினிகாந்த் ஆகியோருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார் அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
Tags:    

Similar News