செய்திகள்

சேலத்தில் தொழில் அதிபர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2018-07-23 10:56 GMT   |   Update On 2018-07-23 10:56 GMT
சேலத்தில் தொழில் அதிபர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robberycase

சேலம்:

சேலம் காந்திரோடு ராமையா காலனியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 72). இவர் 4 -ரோடு பகுதியில் ஒரு வணிக வளாகத்தில் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஒரு மகள் அமெரிக்காவிலும், மற்றொரு மகள் மதுரையிலும் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அமெரிக்காவில் வசித்து வரும் மகள் தனது தந்தையை பார்ப்பதற்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அமெரிக்காவில் இருந்து சேலம் வந்தார். தந்தை வீட்டில் ஒரு வாரகாலமாக தங்கியிருந்த அவர் நேற்று இரவு அமெரிக்கா செல்ல புறப்பட்டார்.

அப்போது ஜெயராமன் காரில் தனது மகளை அழைத்துக் கொண்டு அமெரிக்காவுக்கு வழியனுப்புவதற்காக பெங்களூரு விமான நிலையத்திற்கு சென்றார்.

பின்னர் பெங்களூருவில் இருந்து இன்று காலை ஜெயராமன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டுக்குள் இருந்த நகை, வெள்ளி, பணம் போன்றைவை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது.

இந்த சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு ஜெயராமன் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டின் 2 தளங்களிலும் பார்வையிட்டு கொள்ளையர்கள் எந்த வழியாக வந்திருப்பார்கள்? எத்தனை பேர் வந்திருப்பார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரிடம், ஜெயராமன் கூறுகையில் நான், வீட்டுக்குள் 15 கிலோ வெள்ளி, 15 பவுன் நகை, 2 லட்சம் பணம் ஆகியவை வைத்திருந்தேன். இவற்றை கொள்ளையர்கள் திருடி சென்று விட்டார்கள் என்றார்.

மேலும் அங்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஜன்னல், கதவு, பீரோக்களில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தார்கள். துப்பறியும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடிக்க ஏவி விடப்பட்டது. மோப்பநாய் வீடு முழுவதும் சுற்றி சுற்றி வந்தது. இந்த கொள்ளை சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Robberycase

Tags:    

Similar News