சீர்காழியில் பாசன வாய்க்கால்களை உடனடியாக தூர்வார வேண்டும் பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தல்
சீர்காழி:
சீர்காழி சட்டமன்ற தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் வைத்தீஸ்வரன்கோவிலில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜி.வெங்கடேசன் தலைமை வகித்தார். நகர தலைவர் செல்வமுத்துக்குமார் வரவேற்றார்.
மாவட்ட பொதுசெயலாளர்கள் முத்துசாமி, அகோரமூர்த்தி, வழக்குரைஞர் பிரிவு மாவட்ட பொதுசெயலாளர் கணேசமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் மற்றும் அமைப்பு பணிகள் குறித்து மாநில செயலாளர் புரட்சிகவிதாசன், மாநில ஓ.பி.சி. அணி துணை தலைவர் பெரோஸ் காந்தி, கோட்ட பொருப்பாளர் தங்க.வரதராஜன், பாராளுமன்ற தொகுதி செயலாளர் அகோரம் ஆகியோர் சிறப்புறையாற்றினர்.
கூட்டத்தில் சீர்காழி உபகோட்டத்தில் உள்ள பாசன வாய்க்கால்களை போர்கால அடிப்படையில் தூர்வார வேண்டும், சீர்காழி தாடாளன் பெருமாள் கோயில் அருகே டாஸ்மாக் கடை மீண்டும் கொண்டு வரும் முயற்சியை டாஸ்மாக் நிர்வாகம் கைவிட வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை அமைத்து விவசாய நிலங்களை காத்திட வேண்டும், கொள்ளிடம் ஆற்றில் நீண்ட காலமாக இயங்கி வரும் வடரெங்கம், மாதிரவேளூர் மணல் குவாரிகளை நிறுத்தவேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில பொதுக்குழு உறுப்பினர் அசோகன், மகளிர் அணி பவானி ஆகியோர் பங்கேற்றனர்.நிறைவில் ஒன்றிய தலைவர் கிரி நன்றி கூறினார்.