செய்திகள்

பண்ருட்டியில் போலீஸ் நிலையம் அருகே இளம்பெண் தீக்குளிப்பு

Published On 2018-07-21 15:45 IST   |   Update On 2018-07-21 15:45:00 IST
பண்ருட்டியில் போலீஸ் நிலையம் அருகே இளம்பெண் தீக்குளித்த சம்பவம் பண்ருட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தண்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் அருள்தாஸ். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயது 25). அருள்தாஸ் அங்குள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் அருள்தாஸ் குடும்பத்தினருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்தவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இது தொடர்பாக பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் விசாரணைக்காக நேற்று இரவு அருள்தாஸ், அவரது மனைவி தமிழ்ச்செல்வி ஆகியோர் சென்றனர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி விட்டு நாளை காலை மீண்டும் வாருங்கள் என்று கூறி அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் வீட்டுக்கு சென்றனர்.

இன்று காலை அருள்தாஸ்- தமிழ்ச்செல்வி ஆகியோர் பண்ருட்டி போலீஸ் நிலையம் சென்றனர். பின்னர் தமிழ்ச் செல்வி கழிவறைக்கு செல்வதாக கணவரிடம் கூறி சென்றார். பின்னர் அவர் போலீஸ் நிலையம் அருகே உள்ள ஒரு கட்டிடத்துக்கு சென்றார்.

அங்கு வைத்து அவர் தனது உடலில் திடீரென்று மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடலில் தீப்பிடித்ததும் அவர் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்து தீயை அணைக்க முயன்றனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் பண்ருட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி ஆறுமுகம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதில் தமிழ்ச்செல்வியின் உடல் முழுவதும் கருகியது.

உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், பண்ருட்டி இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஷ்ணு பிரியா, ஜவ்வாது உசேன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் நிலையம் அருகே இளம்பெண் தீக்குளித்த சம்பவம் பண்ருட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News