செய்திகள்
கோவிந்தன்

வெங்கல் அருகே கொசஸ்தலை ஆற்று மணலில் புதைந்து விவசாயி பலி

Published On 2018-07-21 07:11 GMT   |   Update On 2018-07-21 07:11 GMT
வெங்கல் அருகே கொசஸ்தலை ஆற்று மணலில் புதைந்து விவசாயி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் அருகே காதர்வேடு மாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன். விவசாயியான இவர் ஆடு வளர்த்து வருகிறார்.

கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் இல்லாததால் அப்பகுதியில் வசிப்பவர்கள் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது கோவிந்தன் மேய்ச்சலுக்கு ஓட்டி சென்ற ஒரு ஆடு எதிர்பாராதவிதமாக ஆற்றில் இருந்த ஒரு பள்ளத்தில் விழுந்து விட்டது.

பின்னர் அது மேலே ஏறி வரமுடியாமல் தவித்தது. இதனால் கோவிந்தன் அந்த பள்ளத்தில் இறங்க முயன்றார். ஆனால், அவர் அந்த பள்ளத்தில் விழுந்து விட்டார். பின்னர் அவராலும் மேலே ஏறி வர முடியவில்லை.

பள்ளத்தில் சிக்கிய விவசாயி சிறிது நேரத்தில் மணலில் புதைந்து உயிருக்கு போராடினார். அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு வெளியே எடுத்தனர். ஆனால், அதற்குள் அவர் மூச்சு திணறி இறந்து போனார்.

இதுகுறித்து வெங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News