செய்திகள்

கீரமங்கலம் பகுதியில் வரத்து அதிகரிப்பால் எலுமிச்சை பழங்களின் விலை வீழ்ச்சி

Published On 2018-07-19 16:09 GMT   |   Update On 2018-07-19 16:09 GMT
கீரமங்கலம் பகுதியில் வரத்து அதிகரிப்பால் எலுமிச்சை பழங்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
கீரமங்கலம்:

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், செரியலூர். குளமங்கலம், பனங்குளம், பாண்டிக்குடி, நெய்வத்தளி, சேந்தன்குடி, நகரம் கொத்தமங்கலம், மாங்காடு, வடகாடு, மேற்பனைக்காடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் தென்னந்தோப்புகளுக்குள்ளும், தனியாகவும் எலுமிச்சை சாகுபடி செய்து வருகின்றனர். கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, புளிச்சங்காடு கைகாட்டி, பனங்குளம், குளமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள கமிஷன் கடைகளுக்கு ஒரு நாளைக்கு சுமார் 10 டன் வரை எலுமிச்சை பழங்கள் விற்பனைக்காக வருகிறது.

ஆனால் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு கட்டுபடியான விலை கிடைக்கவில்லை. கடந்த சில நாட்களாக ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.12-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ. 5-க்கும் குறைவாக வாங்கப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வியாபாரிகளும் மொத்தமாக வாங்கி வெளியூர்களுக்கு அனுப்பும் போது ரூ.10-க்கும் குறைவாகவே விற்கப்படுவதால் அவர்களுக்கும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- கடந்த சில ஆண்டுகளாக மே, ஜூன், ஜூலை மாதங்களில் ஒரு கிலோ எலுமிச்சை பழங்கள் ரூ.50 முதல் ரூ.70 வரை விற்பனை ஆனது. அதனால் விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அதிகபட்ச விலை ரூ.20-க்கு விற்பனை ஆனது. ஆனால் தற்போது கிலோ ரூ. 10, ரூ.12 என்று விற்கப்பட்டு வந்த எலுமிச்சை பழங்கள் தற்போது கிலோ ரூ. 5-க்கு விற்பனை ஆகிறது. அதனால் விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை இல்லாமல் இழப்பு ஏற்பட்டு வருகிறது. உற்பத்தி செலவுக்கு கூட பழங்களின் விற்பனை இல்லை என்பதால் ஒவ்வொரு நாளும் இழப்பை சந்திக்க வேண்டியுள்ளது.

கீரமங்கலம் சுற்றியுள்ள சுமார் 50 கிராமங்களில் காய்கறிகள், பழங்கள், மலர்கள் உற்பத்தி அதிகமாக உள்ளது. ஆனால் அவற்றை பாதுகாப்பாக வைக்க குளிர்பதன கிடங்கு இல்லாததால் கட்டுபடியான விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் நட்டத்தில் விற்கும் நிலை உள்ளது. ஒவ்வொரு தேர்தலின் போதும் குளிர்பதன கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுப்பதாக வேட்பாளர்கள் சொல்லிவிட்டு சென்றுவிடுகின்றனர். அதன் பிறகு நடவடிக்கை எடுப்பதில்லை. குளிர்பதன கிடங்கு இருந்தால் விலை குறையும் காலங்களில் மலர்கள், காய், கனிகளை வைத்திருந்து விலை உயரும் போது விற்பனை செய்ய முடியும்.

அதேபோல எலுமிச்சை ஜூஸ் என்று ரசாயனம் கலந்த பானங்களை விற்கும் கடைகாரர்கள் நேரடியாக எலுமிச்சை பழங்களை கொள்முதல் செய்து தரமான ஜூஸ்களை விற்பனை செய்தால் மக்களுக்கும் பாதிப்பு இல்லை. விவசாயிகளுக்கும் எலுமிச்சை பழங்களின் விலை உயர வாய்ப்புகள் உள்ளது.“

இவ்வாறு விவசாயிகள் கூறினர். 
Tags:    

Similar News