தஞ்சையில் பழைய இரும்பு கடையில் பயங்கர தீ விபத்து: லட்சக்கணக்கில் சேதம்
தஞ்சாவூர்:
தஞ்சை, சேப்பனவாரி நடுக்குளத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 50). இவர் அதே பகுதியில் பழைய இரும்பு கடை வைத்துள்ளார். இன்று காலை அவரது கடையில் மேல் பகுதியில் சென்ற மின் வயர் அறுந்து கடையின் மீது விழுந்தது. இதனால் கடையில் இருந்து கரும் புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் கடை மளமளவென தீ பிடித்து எரிய துவங்கியது.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் குடோன் உரிமையாளர் கணேசனுக்கு தகவல் கொடுத்தனர். உடனே அங்கு வந்த கணேசன் தஞ்சை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் திலகர் தலைமையிலான 6 தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் அருகில் உள்ள வீடுகளில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. ஆனால் குடோனில் இருந்த 10 பழைய மோட்டார் சைக்கிள் உள்பட இருப்பு பொருட்கள் தீயில் கருகி சேதமாகியது. இந்த தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து விட்டன.
இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீசார் வழக்குபதவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.