செய்திகள்

நீதிமன்றத்துக்குள் புகுந்து குற்றவாளியை கைது செய்த ஏட்டுக்கு ரூ.500 அபராதம் - ஐகோர்ட் உத்தரவு

Published On 2018-07-16 09:25 GMT   |   Update On 2018-07-16 09:25 GMT
சரண் அடைந்த குற்றவாளியை நீதிமன்றத்துக்குள் புகுந்து கைது செய்த தலைமை காவலருக்கு ரூ.500 அபராதம் விதித்து ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை:

கோவை சிங்காநல்லூரில் கொலை வழக்கில் தேடப்பட்ட சந்தோஷ் என்பவர், கடந்த ஏப்ரல் 10-ந்தேதி திருப்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அப்போது சிங்காநல்லூர் காவல் நிலைய காவலர்கள், நீதிமன்ற அறைக்குள் நுழைந்து, சந்தோஷை கைது செய்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்த திருப்பூர் பார் கவுன்சில், சம்பவம் தொடர்பாக தலைமை நீதிபதிக்கு அறிக்கை அனுப்பி வைத்தது.

காவல் துறையினரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த தலைமை நீதிபதி, சரணடைந்தவரை நீதிமன்ற அறைக்குள் சென்று கைது செய்ய கூடாது என காவல் துறையினருக்கு தெரியாதா? என கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஐகோர்ட் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன், தலைமை காவலர் ராபர்ட், டிரைவர் வேலன் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். 3 பேரும் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டனர்.

தலைமை காவலர் தான் கோர்ட்டுக்குள் சென்று கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டார் என்று தெரியவந்தது. இதையடுத்து தலைமை காவலருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர், டிரைவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது.

நேரில் ஆஜரான காவல் துறை ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேரும் தங்களுடைய செயலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மனுதாக்கல் செய்தனர்.

மேலும், நீதிமன்றத்திற்குள் காவல்துறையினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிமன்றத்திற்குள் நுழைந்து சந்தோஷை கைது செய்த தலைமை காவலரின் மன்னிப்பை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தார்.
Tags:    

Similar News