செய்திகள்

கிராமங்களில் சத்துணவு முட்டை விற்பனை: அதிகாரிகள் விசாரணை

Published On 2018-07-12 19:28 IST   |   Update On 2018-07-12 19:28:00 IST
அரக்கோணம் அருகே திருத்தணியில் இருந்து கொண்டு வரப்பட்ட சத்துணவு முட்டை விற்கப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:

அரக்கோணம் அருகே காவனூர், நரசிங்கபுரம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் சத்துணவு முட்டை விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து வேலூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பிச்சாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, மேலாளர் சாந்தி ஆகியோர் நரசிங்கபுரம் பகுதியில் நேரடியாக சென்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

பொதுமக்கள் எங்கள் பகுதியில் மூதாட்டி ஒருவர் முட்டை விற்பதாக தெரிவித்தனர். அந்த மூதாட்டியிடம் விசாரணை நடத்தியபோது நான் முட்டை விற்கவில்லை என்றார். இதையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே தாழவேடு கிராமத்தில் இருந்து சிலர் சத்துணவு முட்டைகளை வாங்கி வந்து விற்பனை செய்வது தெரிய வந்தது.

இதுகுறித்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிச்சாண்டி கூறியதாவது:-

அரக்கோணம் அருகே கிராமங்களில் சத்துணவு முட்டை விற்கப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம். அரக்கோணம் தாலுகா பகுதியில் இருந்து சத்துணவு முட்டை எதுவும் விற்கப்படவில்லை.

திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்துதான் சத்துணவு முட்டைகளை சிலர் வாங்கி வந்து விற்பதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அரக்கோணம் ஒன்றியத்தில் உள்ள 81 சத்துணவு மையங்கள், நகராட்சியில் உள்ள 10 மையங்களில் சத்துணவு முட்டை இருப்பு விவரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தருமாறு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் சத்துணவு முட்டை இருப்பில் தவறு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் அரக்கோணம் பகுதியில் சத்துணவு முட்டையை யாராவது கொண்டு வந்து விற்பனை செய்தால் உடனடியாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். #tamilnews
Tags:    

Similar News