செய்திகள்

விழுப்புரத்தில் கலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து போலீசார் ஒத்திகை

Published On 2018-07-11 17:35 GMT   |   Update On 2018-07-11 17:35 GMT
கலவரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக போலீசாருக்கான ஒத்திகை நிகழ்ச்சி விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று காலை விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில், கலவரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் போலீசார்களில் ஒரு தரப்பினர் சாதாரண உடையில் கலவரக்காரர்கள்போல் செயல்பட்டு கல்வீசியும், உருட்டுக்கட்டைகளை தூக்கி வீசியும் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டனர்.

இதையறிந்ததும் மற்றொரு தரப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியன் தலைமையில் விரைந்து வந்து கலவர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இவர்கள் முதல்கட்டமாக கலவரத்தை தடுக்கும் வகையில் ஒலிப்பெருக்கி மூலம், கலவரக்காரர்களிடம் கும்பலாக கூடுவது சட்டவிரோதமானது, எனவே உடனடியாக கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை செய்தனர்.

இதையடுத்து போலீசார், உயர் அதிகாரியின் உத்தரவை பெற்று அடுத்தகட்டமாக கலவரக்காரர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்தும், பின்னர் வஜ்ரா வாகனத்தை வரவழைத்து அதன் மூலம் கலவரக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து போலீசாரை தாக்கும் வகையில் வருபவர்களை எப்படி தடுக்க வேண்டும் என்பதை விளக்கும் வகையில், போலீசார் தலைக்கவசம், கவச உடை அணிந்தபடி தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். பின்னர் தடியடி நடத்துவது, துப்பாக்கி சூடு நடத்துவது போன்றும் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

இவ்வாறு கலவர தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் போலீசார் தத்ரூபமாக ஈடுபட்டனர். இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பார்வையிட்டு, கலவரம் நடைபெறும் இடங்களில் போலீசார் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றி, அறிவுரைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின்போது மதுவிலக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முகிலன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சங்கர், வீமராஜ், திருமால், இளங்கோவன், சரவணன், ராஜேந்திரன், முத்துமாணிக்கம் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். 
Tags:    

Similar News