செய்திகள்

8 வழிச்சாலை - காஞ்சீபுரம் மாவட்டத்தில் நிலம் அளவீடு தொடங்கியது

Published On 2018-07-10 08:14 GMT   |   Update On 2018-07-10 08:14 GMT
காஞ்சீபுரம் மாவட்டத்திலும் 8 வழி சாலை திட்டத்துக்கு நிலம் அளவீடும் பணி நடந்து வருகிறது. #Greenwayroad

ஸ்ரீபெரும்புதூர்:

சென்னை-சேலம் இடையே 8 வழி சாலை திட்டம் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக 277 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்படுகிறது.

இதற்காக விவசாய நிலங்கள், வீடுகள், கையகப்படுத்தப்படுகிறது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 59.1 கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்கப்படுகிறது. இதில் 1300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. காஞ்சீபுரம் மாவட்டம் தாம்பரத்தை அடுத்த கரசங்காலில் இருந்து தொடங்கி ஒரத்தூர், நாட்டரசன்பட்டு, வடக்குப்பட்டு, ஆப்பூர், குருவன்மேடு, பாலூர், அரும்புலியூர், ஆனம்பாக்கம், மணல்மேடு, ஒழுகரை, இளநகர், மாவட்ட எல்லையான பெருநகர் வழியாக திருவண்ணாமலை மாவட்டத்துக்குள் செல்கிறது.

8 வழி சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்த அளவீடு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

நிலம் அளவிடும் போது விவசாயிகள் போராட்டம் நடத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. சிலர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டனர்.

அவர்களை பாதுகாப்புக்கு வந்த போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். விவசாயிகள், கிராமமக்கள் எதிர்ப்பையும் மீறி சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் நிலம் அளவீடு நடந்து முடிந்து விட்டது. நிலம் அளவீடு பணியில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நிலம் அளவீடு பணி இன்று தொடங்கியது. தாம்பரம் அடுத்த கரசங்கால் பகுதியில் ஆர்.டி.ஓ ராஜூ தலைமையில் அதிகாரிகள் நிலத்தை அளந்தனர். அளவிடப்பட்ட இடத்தில் பள்ளம் தோண்டி கற்களை நட்டனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்திலும் 8 வழி சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து விவசாயிகள் போராட்டம் நடத்தக் கூடும் என்பதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். போலீசார் பாதுகாப்புடன் நிலம் அளவீடும் பணி நடந்து வருகிறது.

Tags:    

Similar News