செய்திகள்

புழல் ஜெயிலில் மாயமான கைதி - 4 மணி நேரத்துக்கு பின் சிக்கினான்

Published On 2018-07-07 10:10 GMT   |   Update On 2018-07-07 10:10 GMT
புழல் ஜெயிலில் மொட்டை மாடியில் பதுங்கி இருந்த கைதியை போலீசார் 4 மணி நேரத்திற்கு பின்பு பிடித்தனர்.

செங்குன்றம்:

புழல் ஜெயிலில் தினமும் இரவு கைதிகள் கணக்கெடுக்கப்பட்டு அவரவர் அறைகளில் அடைக்கப்படுவார்கள். விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள ஜெயிலில் 1,543 பேர் உள்ளனர்.

நேற்று இரவு 9.30 மணிக்கு போலீசார் விசாரணை கைதிகளை கணக்கெடுத்த போது ஒரு கைதி மட்டும் மாயமாகி இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார், அந்த கைதி தப்பி சென்று இருப்பாரோ? என்ற பரபரப்பு நிலவியது.

ஆனால் அந்த கைதி ஜெயிலுக்குள்ளேயே பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஜெயில் முழுவதும் தீவிரமாக தேடினார்கள். ஆனால் அவரை நள்ளிரவு வரை கண்டுபிடிக்க முடிய வில்லை.

நள்ளிரவு 1.30 மணி அளவில் ஜெயிலில் உள்ள நூலகத்தின் மொட்டை மாடியில் மாயமான கைதி பதுங்கி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். உடனே அவரை பிடித்துக் கொண்டு வந்து அறையில் அடைத்தனர்.

விசாரணையில் அவர் பெசன்ட் நகரைச் சேர்ந்த ராஜேஷ் என்பதும், வழிப்பறி வழக்கில் அவரை கடந்த 1-ந்தேதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் ஜெயிலில் இருந்து தப்பிக்க முயன்றதும் தெரிய வந்தது.

மாயமான கைதியை போலீசார் 4 மணி நேரத்திற்கு பின்பு பிடித்தனர். கைதி ஜெயிலில் இருந்து தப்பிக்காமல் சிக்கியதால் போலீசார் நிம்மதி அடைந்தனர்.

Tags:    

Similar News