செய்திகள்

உயர் கல்வி உதவித் தொகைக்கான கூடுதல் நிதிச் சுமையை தமிழக அரசே ஏற்கும்- ஓ.பன்னீர்செல்வம்

Published On 2018-07-05 01:13 GMT   |   Update On 2018-07-05 01:13 GMT
ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்களின் நலன்கருதி உயர் கல்வி உதவித் தொகைக்கான கூடுதல் நிதிச் சுமையை தமிழக அரசே ஏற்கும் என்று சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #OPannerselvam #TNAssembly #ADMK
சென்னை:

சட்டசபையில் நேற்று நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று தி.மு.க. உறுப்பினர் கணேசன் (திட்டக்குடி தொகுதி) பேசினார். அப்போது அவர், பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜலட்சுமி, ‘பஞ்சமி நிலங்களை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பஞ்சமி நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தொடர்ந்து பேசிய உறுப்பினர் கணேசன், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உயர் கல்வி உதவித் தொகை வழங்கப்படாத நிலை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்து பேசியதாவது:-

மத்திய அரசின் நிதி உதவியோடு செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டம்தான் இந்தத் திட்டம். 2017-2018-ம் ஆண்டுக்கான முதலாண்டு மாணவர்களுக்கும் வழங்க வேண்டிய பராமரிப்பு உதவித்தொகையும், கல்லூரிகளுக்கு வழங்க வேண்டிய நிர்வாகக் கட்டணமும் தவிர, மற்ற அனைத்து உதவித்தொகைகளையும் முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கான நிதியை உடனடியாக வழங்க தமிழ்நாடு அரசு தற்போது ரூ.850 கோடியை விடுவித்துள்ளது. 2018-2019-ம் ஆண்டிற்கான சேர்க்கை முடிவுற்ற பின்பு, கல்வி உதவிக்கான கேட்பு கணக்கிடப்பட்டு, அதற்கான உதவித்தொகையையும் மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைப்படி, மாநில அரசின் பொறுப்புத் தொகை ரூ.1,526 கோடியே 46 லட்சமாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், இத்திட்டத்தின் மொத்த கேட்பு 2018-2019-ம் ஆண்டிற்கு அதற்கு மேல் உயர வாய்ப்பில்லை.

இந்தநிலையில், மத்திய அரசின் இந்தத் திட்டத்தில், இந்தத் திட்டத்திற்கான முழு நிதியையும் இனிமேல் மாநில அரசு, அதன் நிதி ஆதாரத்தில் இருந்தே வழங்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்களின் நலன் கருதி, இந்த நிதிச் சுமையை மாநில அரசே தொடர்ந்து ஏற்று செயல்படுத்தும்.

அதே நேரத்தில், மற்ற மத்திய அரசின் திட்டங்களைப்போல், நிதிப்பகிர்வில் மத்திய அரசின் நிதி 60 சதவீதம், மாநில அரசின் நிதி 40 சதவீதம் என்ற விகிதாச்சாரத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய உறுப்பினர் கணேசன், திட்டக்குடி வெலிங்டன் ஏரி கரை உடைப்பை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “வெலிங்டன் ஏரியை பராமரிக்க ரூ.36 கோடியே 45 லட்சத்தில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது. விரைவில், ஏரி பராமரிப்பு பணிகள் தொடங்கும்” என்றார். #OPannerselvam #TNAssembly #ADMK
Tags:    

Similar News