செய்திகள்

ஆதம்பாக்கத்தில் கழிவுநீர் அகற்றும் நிலையம் அமைக்க வேண்டும்- தா.மோ.அன்பரசன் வலியுறுத்தல்

Published On 2018-07-04 10:53 GMT   |   Update On 2018-07-04 10:53 GMT
ஆதம்பாக்கம் பகுதியில் சாக்கடை தேங்குவதால் கழிவுநீர் அகற்றும் நிலையத்தை அமைக்க தரவேண்டும் என்று சட்டசபையில் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:

ஆலந்தூர் தொகுதியில் உள்ள நிலமங்கை நகர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்க அரசு ஆவன செய்யுமா? என்று சட்டசபையில் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைசர் எஸ்.பி. வேலுமணி பதில் அளித்ததாவது:- நிலமங்கை நகரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்க முதல்- அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும்.

தா.மோ.அன்பரசன்:- 1996-2001-ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் ஆலந்தூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்ட போது, ஆதம்பாக்கம், நிலமங்கை நகரில் 24 மில்லியன் லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட கழிவுநீர் அகற்றும் நிலையம் அமைக்கப்பட்டது.

தற்போது ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், பழவந்தாங்கல் பகுதிகளில் மிகப்பெரிய அளவில் புதிய குடியிருப்புகள் அதிகரித்ததால் கழிவுநீர் அகற்றும் நிலையம் போதிய திறன் சக்தி இல்லாததால் மழைக்காலத்தில் ஆதம்பாக்கம் உள்ளிட்ட தாழ்வான பகுதியில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் கழிவுநீர் தேங்குகிறது.

இந்த நிலையை போக்க இதே திறன் கொண்ட மேலும் ஒரு கழிவுநீர் அகற்றும் நிலையத்தை அதே பகுதியில் அமைத்து தர வேண்டும். இதை மழை காலத்திற்குள் அமைத்து தர வேண்டும்.

அமைச்சர் எஸ்.பி.வேலு மணி:- நிலமங்கை நகர் கழிவுநீர் அகற்றும் நிலையத்தின் உட்பகுதியில் 150 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள காலியிடத்தில் கூடுதலாக தினமும் 10 மில்லியன் லிட்டர் உந்து திறன் கொண்ட கழிவுநீர் அகற்றும் நிலையம் அமைக்க ரூ. 26 கோடியே 10 லட்சம் மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. விரைவில் நிதி பெற்று பணிகள் துவங்கும்.

தா.மோ.அன்பரசன்:- கடந்த 2009-ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் ஆலந்தூர் பகுதிக்கு ரூ. 66 கோடி செலவில் கொண்டு வரப்பட்ட மெட்ரோ குடிநீர் திட்டம் முழுமையாக செயல்படாததால் ஆலந்தூர் பகுதியில் பல இடங்களில் மக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள்.

ஆலந்தூரில் 82 தெருக்களில் குடிநீர் குழாய்கள் மாற்றுவதற்காக ரூ. 13.71 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதை வேகமாக செயல்படுத்தி குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.

வேலுமணி:- பணிகள் வேகமாக முடித்து தரப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News