செய்திகள்
சினேகாஸ்ரீ

ஜெயலலிதாவுக்கு போயஸ்கார்டனில் முதலுதவி சிகிச்சை அளிக்கவில்லை - அப்பல்லோ மருத்துவர் வாக்குமூலம்

Published On 2018-07-04 03:02 GMT   |   Update On 2018-07-04 03:02 GMT
ஜெயலலிதாவுக்கு போயஸ்கார்டனில் முதலுதவி சிகிச்சை எதுவும் அளிக்கவில்லை என்றும், மயக்கநிலையிலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் அப்பல்லோ மருத்துவர் ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். #JayaDeathProbe #ApolloDoctor
சென்னை:

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் சினேகாஸ்ரீ நேற்று ஆஜரானார்.

2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி ஜெயலலிதா போயஸ்கார்டனில் இருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, ஆம்புலன்சில் சினேகாஸ்ரீ மருத்துவராக இருந்துள்ளார். அந்த அடிப்படையில் ஆணையம் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

ஆணையத்தில் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

ஜெயலலிதாவுக்கு ‘திடீர்’ உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த தகவல் அடிப்படையில் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து சென்ற ஆம்புலன்சில் நானும் சென்றேன்.

போயஸ் கார்டனில் ஒரு நாற்காலியில் மயக்கநிலையில் ஜெயலலிதா அமர வைக்கப்பட்டிருந்தார். அங்கு முதலுதவி சிகிச்சை எதுவும் அளிக்கவில்லை.

இதன்பின்பு, போயஸ்கார்டன் பணியாளர்கள் மூலம் ஜெயலலிதாவை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அப்போது ஆம்புலன்சில் சசிகலா, மருத்துவர் சிவக்குமார் ஆகியோர் உடன் வந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை ஜெயலலிதா மயக்கநிலையிலேயே இருந்தார்.

இருதயத்துடிப்பு சீராக அவருக்கு மருத்துவமனையில் ‘பேஸ் மேக்கர்’ கருவி பொருத்தப்பட்டது. காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்ட தகவல் தவறானது.

மேற்கண்டவாறு மருத்துவர் சினேகாஸ்ரீ தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக ஆணைய வட்டாரம் தெரிவித்தது.

அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டபோது, ‘நான் எங்கு இருக்கிறேன்’ என்று ஜெயலலிதா தன்னிடம் கேட்டதாக சசிகலா ஆணையத்தில் ஏற்கனவே வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளார். ஆம்புலன்சில் உடன் சென்ற மருத்துவரான சினேகாஸ்ரீ, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை மயக்கநிலையிலேயே இருந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த முரண்பாடு குறித்து விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது. #JayaDeathProbe #ApolloDoctor

Tags:    

Similar News