செய்திகள்

கொடைக்கானலில் 4 மணி நேரம் பலத்த மழை

Published On 2018-07-02 05:12 GMT   |   Update On 2018-07-02 05:12 GMT
கொடைக்கானலில் 4 மணி நேரம் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெருமாள்மலை:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

கடந்த வருடம் கடுமையான வறட்சி நிலவியதால் பொதுமக்கள் மட்டுமல்லாது சுற்றுலா பயணிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. லாரிகள் மூலம் தண்ணீர் விலைக்கு வாங்கி வரப்பட்டதால் ஓட்டல் மற்றும் லாட்ஜ்களில் கட்டணங்கள் அதிகமாக வசூலிக்கப்பட்டது.

பொதுமக்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு கோடை மழை கைகொடுத்ததால் கொடைக்கானல் மலைப்பகுதியில் மீண்டும் பசுமை ஏற்பட்டுள்ளது.

மேலும் நகராட்சி நீர்தேக்கம் மற்றும் மனோரஞ்சிதம் அணை ஆகியவற்றின் நீர்மட்டமும் சீராக உயர்ந்து வருகிறது.

விவசாயிகள் உருளைகிழங்கு, பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், சவ்சவ் உள்ளிடட காய்கறிகளை பயிரிட்டுள்ளனர். தற்போது பெய்துள்ள மழையால் அவை செழித்து வளர தொடங்கி உள்ளது. நேற்று 4 மணி நேரம் பலத்த மழை பெய்தது. சாரலாக தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. இதனால் கொடைக்கானலில் குளிர்ச்சி அதிகமாக காணப்பட்டது.

கோடை காலம் முடிந்த போதும் பகல் பொழுதில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தற்போது பெய்த மழை பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகளும் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தற்காலிக தீர்வு காணப்பட்டுள்ளது.

கீழ்மலை பகுதிகளான பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, தாண்டிக்குடி ஆகிய பகுதிகளில் சாரல் மழையாக தொடங்கி 3 மணி நேரம் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News