செய்திகள்

உடுமலை அரசு ஆஸ்பத்திரி 3-வது மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை

Published On 2018-06-30 20:43 IST   |   Update On 2018-06-30 20:43:00 IST
உடுமலை அரசு ஆஸ்பத்திரி 3-வது மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை செய்து கொண்டார்.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சின்ன பாப்பனூத்து கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (33). கூலித் தொழிலாளி. இவரது மனைவி காளீஸ்வரி (29). இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.

இவர்களுக்கு 2 பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மணிகண்டன் சாணிப்பவுடரை குடித்து விட்டார். இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த மணிகண்டன் திடீரென ஆஸ்பத்திரியின் 3-வது மாடிக்கு சென்றார். அங்கிருந்து கீழே குதித்தார்.

இதில் அவர் எலும்பு முறிந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அங்கிருந்த நோயாளிகளின் உறவினர்கள் அவரை மீட்டனர். பின்னர் ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

உடல் நிலை மோசமாக இருந்ததால் அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்க முடிவு செய்தனர். இதற்காக ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டது. அதற்குள் மணிகண்டன் இறந்து விட்டார்.

இது குறித்து உடுமலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்தனர். மணிகண்டன் எதற்காக ஆஸ்பத்திரியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை.

உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் மாடிக்கு செல்லும் வழி கிரீல் கதவால் பூட்டி வைக்கப்பட்டு உள்ளது. மணிகண்டன் மாடிக்கு எப்படி சென்றார் என்பது தெரிய வில்லை.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மணிகண்டன் ஏற்கனவே 3 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

Tags:    

Similar News