செய்திகள்

ஜெயலலிதாவுக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களா வளாகத்தில் திடீர் தீ விபத்து

Published On 2018-06-28 22:24 GMT   |   Update On 2018-06-28 22:24 GMT
ஜெயலலிதாவுக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களா வளாகத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காய்ந்த புற்கள் மற்றும் இலைச்சருகுகளில் பற்றி எரியும் தீயை அணைக்க வீரர்கள் போராடி வருகின்றனர்.
சென்னை:

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனது ஓய்வு நேரத்தை கழிக்கும் முக்கிய இடங்களில் ஒன்று, காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள சிறுதாவூர் பங்களா ஆகும். இங்கு தான் தனது தோழி சசிகலாவுடன் பலமுறை ஜெயலலிதா தங்கி ஓய்வு எடுத்து இருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சிறுதாவூர் பங்களா தொடர்ந்து பூட்டப்பட்டிருந்தது. அங்கு யாரும் செல்லவில்லை என்றே கூறப்படுகிறது.



பங்களாவை சுற்றிலும் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் காலி நிலமே உள்ளது. இதில் அதிகளவு சவுக்கு மரங்கள் வளர்ந்திருக்கின்றன. மற்றபடி காய்ந்த புற்களும், இலைச் சருகுகளுமே அதிகமாக காணப்படுகின்றன.

இந்தநிலையில் சிறுதாவூர் பங்களா வளாகத்தில் உள்ள நிலப்பரப்பில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. வளாகத்தை சுற்றிலும் படர்ந்திருந்த காய்ந்த புற்களில் பற்றிய தீ அடுத்தடுத்த நிமிடங்களில் வேகமாக பரவியது. ஒருகட்டத் தில் புற்களில் கொழுந்துவிட்டு எரியும் தீயானது, காட்டுத்தீ போல காட்சியளித்தது.

தகவல் அறிந்து சிறுசேரி நிலைய அதிகாரி கே.காளிமுத்து தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கூடுதலாக திருக்கழுக்குன்றம், மறைமலைநகர், செங்கல்பட்டு நிலையங்களில் இருந்தும் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. ஏக்கர் கணக்கில் இருக்கும் புற்களில் தீப்பற்றியதால், தீயை அணைக்கும் பணி கடும் சவால் நிறைந்ததாக அமைந்தது. இரவு முழுவதும் தீயை அணைக்கும் பணி நடந்துகொண்டிருந்தது.

இதுகுறித்து சிறுசேரி நிலைய அதிகாரி கே.காளிமுத்து கூறுகையில், “பல ஏக்கர் பரப்பளவுக்கு தீ ஆக்கிரமித்து இருக்கிறது. முதற்கட்டமாக பங்களாவுக்குள் தீ பரவாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. போம் கலவை (ரசாயன நுரை கலவை) கொண்டு தீயை அணைக்க போராடி வருகிறோம். முழுமையாக தீயை கட்டுப்படுத்துவது உடனடியாக முடியாத காரியம். அருகில் உள்ள காட்டு பகுதிக்கு தீ பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என்றார்.

சிறுதாவூர் பங்களா வளாகத்தில் கடந்த ஆண்டு ஏற்கனவே 2 முறை இதேபோல தீ விபத்து நடந்து உள்ளது. எனவே இதற்கு ஏதேனும் சமூக விரோத செயல் காரணமாக இருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News