செய்திகள்

மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் - நிர்மலாதேவிக்கு குரல் பரிசோதனை நிறைவு

Published On 2018-06-28 08:59 GMT   |   Update On 2018-06-28 08:59 GMT
மெரினா காமராஜர் சாலையில் டி.ஜி.பி. அலுவலகம் அருகில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்தில் நிர்மலாதேவிக்கு 5 சுற்றுகளாக குரல் பரிசோதனை நடத்தப்பட்டது. #NirmalaDevi #VoiceTest
சென்னை:

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியை சேர்ந்த பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் கடந்த ஏப்ரல் மாதம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதே கல்லூரியில் படித்த சக மாணவிகளையே நிர்மலாதேவி பாலியல் தொழிலில் ஈடுபட சம்மதிக்க அழைப்பு விடுத்தார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கினால் உங்களுக்கு செமஸ்டர் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் என்று செல்போனில் பேசி நிர்மலாதேவி ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியது கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நிர்மலாதேவி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2½ மாதங்களுக்கும் மேலாக அவர் சிறையிலேயே உள்ளார்.

இந்த வழக்கை பொறுத்தவரையில் மாணவிகளிடம் செல்போனில் பேசியது நிர்மலாதேவிதான் என்பதை உறுதிபடுத்த வேண்டிய கட்டாயம் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நிர்மலா தேவியை சென்னைக்கு அழைத்துச் சென்று குரல் பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதற்கு கோர்ட்டு அனுமதி அளித்தது.

இதனை தொடர்ந்து நேற்று காலையில் மதுரை சிறையில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட நிர்மலாதேவி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இன்று காலையில் அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் அவர் வெளியில் அழைத்து வரப்பட்டார்.

அவரது வாகனத்திற்கு முன்னால் 2 வாகனங்களும், பின்னால் 2 வாகனங்களும் அணிவகுத்தன. துப்பாக்கி ஏந்திய போலீசார் நிர்மலா தேவியை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

மெரினா காமராஜர் சாலையில் டி.ஜி.பி. அலுவலகம் அருகில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்துக்குள் காலை 10.25 மணி அளவில் நிர்மலாதேவியை போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு 5 சுற்றுகளாக குரல் பரிசோதனை நடத்தப்பட்டது.

நிர்மலாதேவியை பேச வைத்து அந்த குரலை பதிவு செய்தனர். அவரிடம் கேள்விகளை கேட்டு அதற்கு அவர் அளித்த பதில்களையும் தடயவியல் நிபுணர்கள் பதிவு செய்து கொண்டனர்.

இந்த குரல் மாதிரி பதிவுகளை தடயவியல் நிபுணர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். இது முடிவடைந்ததும் இன்னும் சில தினங்களில் நிர்மலாதேவியின் செல்போன் உரையாடல் அடங்கிய குரலுடன் இப்போது பதிவு செய்யப்பட்டுள்ள குரல் மாதிரி ஒப்பிட்டு பார்க்கப்பட உள்ளது.

இதன் பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தங்களது அடுத்த கட்ட விசாரணையை தீவிரப்படுத்தி வழக்கை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த வழக்கில் நிர்மலா தேவியை சிக்க வைத்ததே அவரது ஆடியோ பேச்சுக்கள்தான் என்பதால் இன்று நடத்தப்பட்ட குரல் பரிசோதனை நிர்மலாதேவி வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. #NirmalaDevi #VoiceTest
Tags:    

Similar News