செய்திகள்
கோப்புப்படம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர். பெயரில் ஆய்வு இருக்கை - முதல்வர் அறிவிப்பு

Published On 2018-06-28 06:29 GMT   |   Update On 2018-06-28 09:15 GMT
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர். பெயரில் ஆய்வு இருக்கை தொடங்கப்படும் என சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #TNassembly
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டைப் போற்றும் வகையிலும் மற்றும் சமூகத் தின் மீதான அவரின் ஆழ்ந்த அக்கறை, கலைத் தொண்டு, தமிழ் உணர்வு மற்றும் மக்கள் பணி ஆகியவற்றை நம் நாட்டு மக்களும், வெளிநாட்டவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளவும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாடு ஆய்வு இருக்கை ஒன்று ஒரு கோடி ரூபாய் வைப்புத் தொகையாக வைத்துத் தொடங்கப்படும்.

லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகனஸ்பார்க் பல்கலைக் கழகம், மலேசியாவிலுள்ள மலேயா பல்கலைக்கழகம், இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மற்றும் தமிழர்கள் அதிகமாக வாழும் வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் தமிழ் இருக்கைகள் தொடர்ந்து நிறுவப்படும். இதற்கென ஆண்டு தோறும் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழாய்வுகள், தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள், மொழி பெயர்ப்புகள் போன்ற தமிழ் இலக்கியப் பணிகளை ஒன்றிணைக்கும் வகையில், ஆய்வரங்குகள், கருத்தரங்குகள், கவியரங்குகள், சொற்பொழிவு, பட்டிமன்றம், இலக்கியச் சுற்றுலா, உலகத் தமிழர் கலைத் திருவிழா உள்ளிட்ட நிகழ்வுகளை உள்ளடக்கிய உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 5 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்.

ஆங்கில மொழி அறிஞர்கள், ஆங்கில மொழிச் சொற்களை தொகுத்தல் முறையில் அணியமாக்கி, மொழி ஆராய்ச்சி செய்யும் அறிஞர்களுக்கு வழங்கி வருகின்றனர். அதுபோல், உலகின் பழமையான மொழிகளுள் மூத்த மொழியாகக் கருதப்படும் நம் தமிழ் மொழியிலும் அத்தகைய தொகுப்பு தேவை என்பதை உணர்ந்து, “சொற்குவை” என்ற திட்டம் தொடங்கப்படும்.

அவை இணையதளப் பொது வெளியில் உலகெங்கும் உள்ள தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர் களும், மொழியியல் ஆராய்ச்சி யாளர்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படும். இதற்கென ஆண்டுதோறும் 1 கோடி ரூபாய் தொடர் செலவினமாக ஒதுக்கீடு செய்யப்படும்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை தமிழ் (எம்.ஏ.) பயிலும் மாண வர்களை ஊக்குவிக்கும் வகையில், இவ்வாண்டு முதல் ஆண்டுதோறும் தேர்வின் அடிப்படையில் முதலாம் ஆண்டு பயிலும் 15 மாணவர்கள், இரண்டாம் ஆண்டு பயிலும் 15 மாணவர்கள் என மொத்தம் 30 மாணவர்களுக்கு மாதந் தோறும் கல்வி உதவித்தொகையாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும். இதற்கென தொடர் செலவினமாக ஆண்டுக்கு 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNAssembly #MGRStudyChair
Tags:    

Similar News