செய்திகள்

தூய்மை நகரங்கள் பட்டியலில் அரியலூர் நகராட்சி மாநில அளவில் 2-ம் இடம்

Published On 2018-06-27 12:25 GMT   |   Update On 2018-06-27 12:25 GMT
தூய்மை நகரங்கள் பட்டியல் தரவரிசையில் அரியலூர் நகராட்சி மாநில அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளது.
அரியலூர்:

தூய்மை இந்தியா திட்டத்தில் ஆண்டுதோறும் தூய்மையான நகரங்களை அவற்றின் சுகாதார செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளின் அடிப்படையில் ஆய்வு செய்து தரநிலை அறிவிக்கப்படுவதோடு, சிறந்த நகரங்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் “சுவச்சர் வக்சான் 2018’’ தூய்மை நகரங்கள் கணக்கெடுப்பு மற்றும் ஆய்வு, நாடு முழுவதும் 4,203 நகரங்களில் மேற்கொள்ளப்பட்டு தரநிலை வெளியிடப்பட்டது.

இத்திட்டத்தில் தெற்கு மண்டலத்தில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு குறைவான மக்கள் தொகை கொண்டுள்ள நகரங்களில் 1,113 நகரங்களுக்கு தரவரிசை வெளியிடப்பட்டது. தமிழக அளவில் 637 பேரூராட்சி மற்றும் நகராட்சிகள் இந்த போட்டியில் பங்கேற்றன. இதில் அரியலூர் நகராட்சி 2,194 புள்ளிகள் பெற்று தரவரிசை பட்டியலில் மாநில அளவில் 2-ம் இடத்தை பெற்றுள்ளது.

இதேபோல் தென்னிந்திய அளவில் அரியலூர் நகராட்சி 36-வது இடத்தை பெற்றுள்ளது. நடப்பாண்டில் அரியலூர் நகராட்சி திறந்தவெளி கழிப்பிடமில்லா நகராட்சியாகவும் தரச்சான்றை மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளது.

அரியலூர் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 28 ஆயிரத்து 902 பேர் வசித்து வருகின்றனர்.

தூய்மை இந்தியா திட்டத்தில் மாநில அளவில் 2-ம் இடத்தை பிடித்த நகராட்சிக்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் அருகில் உள்ள வாலாஜாநகரம் மற்றும் எருத்துகாரன்பட்டி ஊராட்சிகளையும் இணைத்து அரியலூர் நகராட்சியை விரிவுபடுத்த வேண்டும் என்று நகர மேம்பாட்டு குழுவினர் விரும்புகின்றனர்.
Tags:    

Similar News