செய்திகள்

வடகாடு மலைப்பகுதியில் இயங்கும் ஓட்டை, உடைசலான அரசு பஸ்களால் மக்கள் அவதி

Published On 2018-06-27 16:21 IST   |   Update On 2018-06-27 16:21:00 IST
வடகாடு மலைப்பகுதியில் இயக்கப்படும் ஓட்டை, உடைசலான அரசு பஸ்களை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சத்திரப்பட்டி:

ஒட்டன்சத்திரத்தில் இருந்து வடகாடு மலைப்பகுதிகளான வடகாடு, வண்டிப்பாதை, பால்கடை, பெத்தேல்புரம் வழியாக பாச்சலூர், கே.சி.பட்டி, பெரியகுளம், வத்தலகுண்டு, கொடைக்கானல் ஆகிய ஊர்களுக்கு ஏராளமான அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மலைப்பகுதிக்கு இயக்கப்படும் பெரும் பாலான அரசு பேருந்துகளில் மாற்று சக்கரம், டயர்களை கழட்டி, மாட்டும் உபகரணங்கள் இல்லாமல் இயக்கப்படுவதால் அடிக்கடி நடுவழியில் நிற்கும் அவலம் உள்ளது. இதன் காரணமாக மாணவ- மாணவிகள், விவசாயிகள், அரசு ஊழியர்கள் உள்பட அனைத்து தரப்பு பொதுமக்களும் பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வரும் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது. மலைப் பகுதிக்கு இயக்கப்படும் ஏராளமான பேருந்துகளில் மேல்பகுதி பழுதடைந்து, மைக்கா சீட்டை வைத்து, ஒட்டுபோட்டுள்ளனர். மழை அதிகமாக பெய்யும் பட்சத்தில் மலைப்பகுதி பேருந்துகளில் செல்லும் பயணிகள் குடையை பிடித்துச் செல்லும் அவலம் உள்ளது. எனவே ஓட்டை உடைசலான பஸ்களை மாற்றி புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News