செய்திகள்

பசுமை வழிச்சாலை திட்டம்: தமிழக அரசை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்

Published On 2018-06-26 16:21 GMT   |   Update On 2018-06-26 16:21 GMT
பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக தமிழக அரசை கண்டித்து திருவண்ணாமலையில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 5 எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.
திருவண்ணாமலை:

சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து போராடும் மக்கள் மீதான அ.தி.மு.க. அரசின் நடவடிக்கையை கண்டித்து நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான எ.வ.வேலு தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.சிவானந்தம், எம்.எல்.ஏ.க்கள் கு.பிச்சாண்டி, மு.பெ.கிரி, கே.வி.சேகரன், எஸ்.அம்பேத்குமார், மாவட்ட அவைத் தலைவர் வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் எ.வ.வேலு எம்.எல்.ஏ. பேசியதாவது:-

பசுமை வழிச்சாலை தொடர்பாக விவசாயிகளின் கருத்து கேட்கவில்லை. மக்களை துன்புறுத்தி நிலங்களை பெறக்கூடாது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 இடங்களில் காப்புக்காடுகள் உள்ளன. பசுமை வழிச்சாலையினால் காப்புக்காடுகள் பாதிப்புக்கு உள்ளாகும். பசுமை வழிச்சாலையினால் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு தான் அதிகம் பாதிப்பு. 122 கிலோ மீட்டர் சாலை அமைக்க 1100 ஹெக்டர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

ஜெயலலிதா முதல் - அமைச்சராக இருந்த போது மேம்பாலங்கள் அமைப்பது தொடர்பாக அறிவித்து இருந்தார். அந்த திட்டங்களை நிறைவேற்ற முன்வராமல், பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆர்வம் காட்டுவதன் நோக்கம் என்ன.

மக்களுக்கு விருப்பம் இல்லாத திட்டத்தை கைவிட்டு விட்டு மாற்று வழிகளை கையாள வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், டாக்டர் எ.வ.வே.கம்பன், மாவட்ட அமைப்பாளர் அண்ணாதுரை உள்பட பலர் கலந்துகொண்டனர். 
Tags:    

Similar News