செய்திகள்

பொறாமை இல்லை வருத்தம் தான் - மதுரையில் எய்ம்ஸ் குறித்து தோப்பு வெங்கடாச்சலம் கருத்து

Published On 2018-06-21 05:37 GMT   |   Update On 2018-06-21 05:37 GMT
எய்ம்ஸ் மருத்துவமனை பெருந்துறையில் அமையாமல் போனது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம், மதுரையில் எய்ம்ஸ் அமைவதால் பொறாமை இல்லை வருத்தம் தான் என தெரிவித்துள்ளார்.
பெருந்துறை:

மத்திய அரசு சார்பில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அறிவிக்கப்பட்டதோடு மருத்துவமனையை எங்கு அமைப்பது? என இடம் தேர்வு செய்யும் பணியும் தொடங்கியது. மத்திய அரசு குழுவினர் தமிழக அதிகாரிகளுடன் பல இடங்களை ஆய்வு செய்தனர்.

அதில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை, மதுரை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், தஞ்சை ஆகிய இடங்கள் முன்னணி இடத்தில் இருந்தது.

பெருந்துறையில் மருத்துவக்கல்லூரியின் பின்புறம் இடம் தேர்வு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட அந்த இடம்தான் என முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

மத்திய குழுவினரும் போதுமான இடவசதி உள்ளது என்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறி விட்டு சென்றனர்.

இதனால் எய்ம்ஸ் மருத்துவமனை பெருந்துறையில் கிட்டத்தட்ட அமைந்துவிடும் என ஈரோடு மாவட்ட அரசியல் தலைவர்கள் உறுதியாக நம்பி இருந்தனர்.

தொகுதி எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலம் பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தார். சட்டசபையிலும் இது பற்றி பேசினார்.

கொங்கு நாடு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரனும் எய்ம்ஸ் மருத்துவமனை கொங்கு மண்டலத்தில் அமைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதே போல பல கட்சியினரும் இதே கோரிக்கையை வலியுறுத்தினர்.

ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமைக்கப்படும் என நேற்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பதில் அனைவருக்கும் மகிழ்ச்சி என்றாலும் அது மதுரைக்கு சென்றது கொங்கு மண்டல மக்களுக்கு ஏமாற்றம்தான்.


எப்படியோ எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்துக்கு வந்தால் போதும் என தங்களுக்குள்ளே ஆறுதல் கூறி வருகிறார்கள்.

பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாததற்கு காரணம் என்ன? என அலசி பார்த்தபோது சில தகவல்கள் கிடைத்தது.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் அதன் அருகேயோ, நடுவிலோ ரோடு இருக்கக்கூடாது. ஆனால் பெருந்துறையில் இடம் தேர்வு செய்த இடத்தின் மத்தியில் ரோடு இருந்தது.

இதனால் காற்று மாசு ஏற்படும் என்ற நிலை ஏற்பட்டது. அப்படி காசு மாசு ஏற்பட்டால் அது மருத்துவமனைக்கு உகந்ததாக இருக்காது. எனவே தான் கடைசி நேரத்தில் பெருந்துறை நிராகரிக்கப்பட்டு மதுரைக்கு சென்றதாக மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர்.

பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாதது கொங்கு மண்டல மக்களுக்கு வருத்தம் கலந்த ஏமாற்றமே என்கிறார்கள் அரசியல் பிரமுகர்கள்.

இது பற்றி தொகுதி எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம் கூறியதாவது:-

பெருந்துறை தோப்பு பகுதியில் அமைய வேண்டிய எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூர் பக்கம் அமைய உள்ளதால் எங்களுக்கு பொறாமை இல்லை. சிறிய வருத்தம் கலந்த ஏமாற்றம் தான்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். இதன் மூலம் அந்த பகுதி மக்கள் மிகவும் பயன் பெறுவார்கள்.

அந்த வகையில் எனது தொகுதியில் மருத்துவமனை அமைந்திருந்தால் ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர் ஆகிய கொங்கு மண்டல மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்.

ஆனால் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை பக்கம் சென்றுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பயன் பெறுவார்கள். எப்படி பார்த்தாலும் மகிழ்ச்சி அடைவது தமிழக மக்கள் தானே!

இவ்வாறு தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. கூறினார். #AIIMS #AIIMSinMadurai
Tags:    

Similar News