செய்திகள்

சாதகமாக தீர்ப்பு வரவில்லை என்றால் நீதிபதியை விமர்சிப்பது வெட்கக்கேடு - நீதிபதி கிருபாகரன்

Published On 2018-06-20 12:12 GMT   |   Update On 2018-06-20 12:12 GMT
தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை எனில் நீதிபதியை மேடைக்கு மேடை விமர்சிப்பது வெட்கக்கேடான ஒன்று என ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்த வழக்கில் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதனால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் நாளை விசாரணையை தொடங்க உள்ளார்.

நேற்று வழக்கு விசாரணை ஒன்றில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?  என்று சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் தமிழக காவல்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும், “முதலமைச்சர், அமைச்சர்களை விமர்சனம் செய்பவர்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது. தலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? இது தொடர்பாக 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்” எனவும் அவர் உத்தரவிட்டார். 

இந்நிலையில், இன்றும் வழக்கு விசாரணை ஒன்றில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார். 
தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை எனில் நீதிபதியை மேடைக்கு மேடை விமர்சிப்பது வெட்கக்கேடான ஒன்று என அவர் கூறினார்.

மேலும், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவல்துறையினரை தவறாக பயன்படுத்துகிறார்கள். காவலர்களை காவல் பணிக்கு மட்டுமே பயன்படுத்துங்கள். காவல் உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவைப்பட்டால் தனியாக தேர்வு செய்து கொள்ள அவர் அறிவுறுத்தினார்.
Tags:    

Similar News