செய்திகள்

பொள்ளாச்சி அருகே லாரி மோதி அக்காள் -தம்பி பலி: டிரைவர் கைது

Published On 2018-06-20 10:00 GMT   |   Update On 2018-06-20 10:00 GMT
பொள்ளாச்சி அருகே பிறந்த நாளுக்கு கோவிலுக்கு சென்ற போது விபத்தில் சிக்கி அக்காள்-தம்பி பலியானார்கள்.

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்தவர் ராமு. இவரது மகன் அஜித் குமார் (20). சூலூர் காரணம்பேட்டை அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.

அஜித் குமாரின் உறவினர் சோமந்துறை சித்தூரை சேர்ந்த செந்தில்வேல். இவரது மகள் மாலதி (21). இவரும் அஜித் குமார் வேலை பார்க்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இருவரும் அக்காள்-தம்பி உறவுமுறை ஆவார்கள்.

நேற்று அஜித்குமார், அவரது அண்ணன் விஜயராகவன், மாலதி, அவரது அண்ணன் முத்துக்குமார் மற்றும் நண்பர்கள் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் பழனி முருகன் கோவிலுக்கு புறப்பட்டனர்.அஜித் குமாரும், மாலதியும் ஒரு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். பின்னால் 2 மோட்டார் சைக்கிளில் மற்ற 4 பேரும் வந்தனர். அவர்கள் பொள்ளாச்சி- உடுமலை ரோடு கோமங்கலம் அருகே சென்ற போது எதிரே தேனியில் இருந்து ஆனைமலை நோக்கி வந்த லாரி அஜித் குமார் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் அஜித் குமார், மாலதி ஆகிய 2 பேரும் லாரியில் சிக்கி தூக்கி வீசப்பட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே யே இறந்தனர், பின்னால் வந்த உறவினர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இருவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

இது குறித்து கோமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அஜித் குமார், மாலதி ஆகியோர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அஜித் குமாருக்கு நேற்று பிறந்த நாள். இதனை தொடர்ந்து அவர் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய முடிவு செய்தார். இதற்காக தனது அக்காள் மாலதி மற்றும் உறவினர்களுடன் கோவிலுக்கு சென்ற போது லாரி மோதியது.

இந்த விபத்தில் தான் அஜித்குமாரும், மாலதியும் பலியாகி விட்டனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தேனி மாவட்டம் பெரியகுளம் கள்ளிப்பட்டியை சேர்ந்த ராஜா (45) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் அக்காள்-தம்பி பலியான சம்பவம் கோட்டூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News