செய்திகள்

வேளாண் பட்டப்படிப்புக்கு கோவை மாணவருக்கு குஜராத்தில் தேர்வு மையம் - பெற்றோர் அதிர்ச்சி

Published On 2018-06-20 09:52 GMT   |   Update On 2018-06-20 09:52 GMT
வேளாண் பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்திருந்த கோவை மாணவருக்கு நுழைவுத் தேர்வு மையம் வெளிமாநிலத்தில் ஒதுக்கப்பட்டிருப்பதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை:

இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகத்தின் கீழ் நாடு முழுவதும் செயல்படும் வேளாண் பல்கலைகழகங்கள் மற்றும் நிறுவனங்களில் பல்வேறு வேளாண் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இவற்றில் இளநிலை படிப்புகளில் 15 சதவீதம், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் 25 சதவீத இடங்கள், அகில இந்திய வேளாண் நுழைவு தேர்வு மூலம் இட ஒதுக்கிடு முறையில் நிரப்பபடுகிறது. முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புக்கான தேர்வுகள் ஜூன் 22-ந் தேதியும், இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகள் 23-ந் தேதியும் நடக்கிறது.

தேசிய வேளாண் நுழைவுத்தேர்வில் பங்கேற்கும் தமிழக மாணவர்களின் வசதிக்காக கோவை, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும். இந்நிலையில் இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பித்திருந்த கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மாணவர் ஹர்‌ஷவர்தன் என்ற மாணவருக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாணவரின் தந்தை ஆசிரியர் மகேஷ் குமார் தெரிவித்தாவது:

வேளாண் நுழைவு தேர்வுக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பித்தோம். இளநிலை படிப்புக்கான விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கோவை, சேலம், மதுரை ஆகிய இடங்களை விருப்ப அடிப்படையில் தேர்வு செய்திருந்தோம். ஆனால் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட தேர்வுக்கான இ-அனுமதி அட்டையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. வருகிற 23-ந் தேதி தேர்வு நடக்க இருக்கையில் ஒரு வார இடைவெளியில் தேர்வுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்வது சிரமமானது. இதுதொடர்பாக தேர்வுக்கான உதவி மின்னஞ்சல் முகவரியில் விண்ணப்பித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இவ்வாறு அவர்கூறினார்.

இதேபோல் ஈரோட்டை சேர்ந்த 2 மாணவர்களுக்கும் அகமதாபாத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

நீட் தேர்வை தொடர்ந்து வேளாண் பட்டப்படிப்பு நுழைவுத்தேர்வுக்கும் வெளிமாநிலத்தில் தமிழக மாணவர்களுக்கு தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருப்பதால் மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
Tags:    

Similar News