செய்திகள்

ஆன்-லைன் மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூலை 7-ந்தேதி தொடங்குகிறது

Published On 2018-06-19 02:07 GMT   |   Update On 2018-06-19 02:07 GMT
முதல் முதலாக ஆன்-லைன் மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வு அடுத்த மாதம் 7-ந்தேதி தொடங்க உள்ளது. முதல் கட்டமாக 10 ஆயிரம் பேருக்கு இடங்கள் மற்றும் கல்லூரியை தேர்ந்து எடுக்க வாய்ப்பு அளிக்கப்படும்.
சென்னை:

தமிழகத்தில் 509 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பி.இ. படிப்பில் சேர அண்ணாபல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி வருகிறது.

இந்த வருடம் ஆன்லைன் மூலம் முதன் முதலாக கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக கடந்த மே மாதம் 3-ந்தேதி முதல் கடந்த 2-ந்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் விண்ணப்பித்தனர்.

விண்ணப்பித்த மாணவ- மாணவிகள் அனைவருக்கும் ரேண்டம் நம்பர் வெளியீடு வழங்கப்பட்டது. மொத்தம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். சான்றிதழ் சரிபார்த்தல் 42 மையங்களில் 8-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெற்றது.



அண்ணாபல்கலைக்கழகத்தில் மட்டும் 17-ந்தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அண்ணாபல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சமர்ப்பித்த அனைத்து சான்றுகளும் சரிபார்க்கப்பட்டு வருகிறது.

இந்த மாதம் 4-வது வாரத்திற்குள் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். மருத்துவ கலந்தாய்வு நடந்த பின்னர் தான் என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கும். என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு முதல் கட்டமாக 10 ஆயிரம் பேருக்கு இடங்கள் மற்றும் கல்லூரியை தேர்ந்து எடுக்க வாய்ப்பு அளிக்கப்படும். பின்னர் படிப்படியாக மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். கலந்தாய்வு உத்தேசமாக அடுத்த மாதம் (ஜூலை) 7-ந்தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது.

தொழில்கல்வி மாணவர்களுக்கும், மாற்றுத்திறனாளி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு கலந்தாய்வு அண்ணாபல்கலைக்கழகத்தில் கடந்த வருடம் நடந்தது போல நேரடியாக நடைபெற உள்ளது. #tamilnews
Tags:    

Similar News