செய்திகள்

அரசு நெருக்கடியால் தீர்ப்பு சாதகமாக வராது: தங்கதமிழ்செல்வன் பேட்டி

Published On 2018-06-16 10:01 GMT   |   Update On 2018-06-16 10:01 GMT
அரசு நெருக்கடியால் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வராது என கருதுவதாக தங்கதமிழ்செல்வன் தெரிவித்தார். #thangatamilselvan #edappadipalanisamy

திண்டுக்கல்:

டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த 18 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் குறித்த சபாநாயகரின் உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட்டு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. 3-வது நீதிபதி இவ்வழக்கை விசாரித்து இறுதி தீர்ப்பை வழங்குவார் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான தங்கதமிழ்செல்வன் வழக்கை வாபஸ் பெறப்போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

நீதிமன்றத்தில் வழக்கை வாபஸ் பெறுவதில் உறுதியாக இருக்கிறேன். ஏனெனில் 3-வது நீதிபதி அளிக்கும் தீர்ப்பும் எங்களுக்கு சாதகமாக வராது. அரசு சொல்வதைதாத்தான் நீதிமன்றம் கேட்கும் நிலையில் உள்ளது.

எனவே நீதி கிடைக்காது என்ற நம்பிக்கையால் நீதிமன்றத்தின் நடவடிக்கையை நாட விரும்பவில்லை. என்னால் தொகுதி பக்கம் செல்ல முடியவில்லை. கடந்த 9 மாதமாக என் தொகுதி மக்களுக்காக எந்தவித அடிப்படை பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க முடியவில்லை. எனவே வழக்கை வாபஸ் பெறுவதன் மூலம் இடைத்தேர்தல் வரட்டும். அதில் நிரந்தரமான எம்.எல்.ஏ. வந்து தொகுதி மக்களுக்கு தேவையான பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியும்.

எனது இந்த முடிவு என்னுடைய தனிப்பட்ட முடிவுதான். தகுதி நீக்கம் செய்யப்பட்ட மற்ற எம்.எல்.ஏ.க்களின் கருத்து என்ன என்பது எனக்கு தெரியாது.

வழக்கை வாபஸ் பெற்றாலும் நான் தொடர்ந்து டி.டி.வி. தினகரன் அணியில்தான் இருப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தங்கத்துரை (நிலக்கோட்டை தனி):-

தங்கதமிழ்செல்வனின் முடிவு அவரது சொந்த விருப்பம். பதவி நீக்கம்தொடர்பாக 18 எம்.எல்.ஏ.க்களும் தனித்தனியாக ஐகோர்ட்டில் மனுக்கள் அளித்து உள்ளோம். அதில் தங்கதமிழ்செல்வம் மட்டுமே வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளார். மற்ற 17 பேரும் டி.டி.வி. தினகரன் சொல்படி நடந்து வருகிறோம்.

வழக்கை வாபஸ் பெற்றாலும் அவரும் எங்கள் அணியில்தான் உள்ளார். எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் எண்ணம் யாருக்கு இல்லை.

அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களின் மீதான தீர்ப்பு விரைவில் வந்தது. ஆனால் எங்களது வழக்கு இத்தனை காலம் தாமதம் ஆகி உள்ளது. அதுவும் மாறுபட்ட தீர்ப்பாக அமைந்து உள்ளதால் 3-வது நீதிபதி அளிக்கும் தீர்ப்பாவது நல்லதாக நடக்கும் என்று நம்புகிறோம்.

கதிர்காமு(பெரியகுளம்):-

நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்கள் அணிக்கும், பெரியகுளம் தொகுதி மக்களுக்கும் ஏமாற்றமாக அமைந்து உள்ளது. நான் கடந்த பல ஆண்டுகளாக இதே தொகுதியில் மருத்துவ சேவை ஆற்றி வருகிறேன். சட்டமும் படித்து உள்ளேன். நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்க கூடாது என்றாலும் தற்போது அளிக்கப்பட்டு உள்ளதீர்ப்பு பெரும் விமர்சனத்துக்கு ஆளாகிவிட்டது.3-வது நீதிபதி நல்ல தீர்ப்பை வழங்குவார் என நம்புகிறோம். தொடர்ந்து இந்த தொகுதி மக்களுக்கு சேவையாற்றவே விரும்புகிறேன். தங்கதமிழ்செல்வன் முடிவு குறித்து கருத்து கூற விரும்பவில்லை. #thangatamilselvan #edappadipalanisamy

Tags:    

Similar News