செய்திகள்

மாணவர்களின் தேவை அறிந்து பி.காம். இடங்கள் அதிகரிக்கப்படும்- அமைச்சர் அன்பழகன்

Published On 2018-06-16 06:34 GMT   |   Update On 2018-06-16 06:34 GMT
மாணவர்களின் தேவை இருப்பின் கூடுதலாக பி.காம். இடங்கள் அதிகரிக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

அரசு மற்றும் தனியார் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு இந்த ஆண்டு மாணவர்களின் கூட்டம் அலைமோதுகிறது. பட்டப்படிப்புகளின் மீது அதிகரித்து வரும் மோகம் தான் இதற்கு காரணமாகும்.

பொறியியல் படிப்புகளின் மீது இருந்து வந்த ஆர்வம் குறைந்து இப்போது கலை அறிவியல் பாடப் பிரிவுகள் மீது திரும்பி இருப்பதால் எல்லா கல்லூரிகளிலும் இடங்கள் நிரம்பி வருகின்றன.

குறிப்பாக பி.காம்., பி.ஏ. ஆங்கிலம், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கே இடம் கிடைக்கவில்லை.

அரசு மட்டுமின்றி ஒரு சில தனியார் கலைக் கல்லூரிகளில் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் இடங்கள் நிரம்பி விட்டதால் மற்ற பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பதாரர்களை மாற்றி வருகிறார்கள். ஆனாலும் இந்த ஆண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பி.காம்.மில் இடம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பி.காம். இடங்கள் கடந்த ஆண்டு சில கல்லூரிகளுக்கு அதகரித்து கொடுக்கப்பட்டது. அதுபோல இந்த வருடமும் தேவையைக் கருதி கூடுதலாக இடங்கள் உருவாக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறியதாவது:-

அரசு கலைக்கல்லூரிகளில் 264 புதிய பாடப் பிரிவுகள் இந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எந்தெந்த கல்லூரிகளில் என்னென்ன பாடப் பிரிவுகள் தொடங்கப்படும் என்பது குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும்.

தற்போது விண்ணப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் அடிப்படையில் புதிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.

புதிய பாடப்பிரிவுகள் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதனை பூர்த்தி செய்த பிறகு தேவை இருப்பின் கூடுதலாக பி.காம். இடங்கள் அதிகரிக்கப்படும். அதேபோல தனியார் கல்லூரிகளிலும் தேவையை அறிந்து இடங்கள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.  #BCom #TNMinister #KPAnbazhagan
Tags:    

Similar News