செய்திகள்

தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு: பவானிசாகர் அணை 69 அடியாக உயர்வு

Published On 2018-06-14 05:31 GMT   |   Update On 2018-06-14 05:31 GMT
நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் பவானிசாகர் அணை 69 அடியாக உயர்ந்து உள்ளது.

பு.புளியம்பட்டி:

ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்வது பவானிசாகர் அணை ஆகும். மேட்டூர் அணைக்கு அடுத்தப்படியாக 2-வது பெரிய அணையாக இது திகழ்கிறது.

கேரள வனப்பகுதி மற்றும் ஊட்டி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை தண்ணீர் பவானி ஆறு மூலமாகவும், மற்றும் காட்டாறான மாயாறு வழியாகவும் பவானிசாகர் அணைக்கு வருகிறது.

கடந்த 3 நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் அணைக்கு கிடு..கிடுவென நீர்வரத்து உயர்ந்தது. இதனால் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.

கடந்த 5 நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 55 அடியாக இருந்தது. இது மள..மளவென உயர்ந்து நேற்று 66 அடியாக உயர்ந்தது.

இன்று காலை மேலும் 3 அடி கூடி 69 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 832 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

கேரள மற்றும் நீலகிரி மலை பகுதியில் இன்று காலை 6 மணியில் இருந்து தொடர்ந்து மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் மதியத்துக்கு மேல் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என பொதுப்பணிதுறையினர் தெரிவித்தனர்.

குடிநீருக்காக பவானி ஆற்றில் வழக்கம் போல் 200 களஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதே போல் கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News