செய்திகள்

நித்தியானந்தா பீடத்திற்கு தியான வகுப்புக்கு சென்ற மனைவியை மீட்டுத்தர வேண்டும் - விவசாயி மனு

Published On 2018-06-12 15:37 GMT   |   Update On 2018-06-12 15:37 GMT
பெங்களூரு நித்தியானந்தா பீடத்திற்கு தியான வகுப்புக்கு சென்ற மனைவியை மீட்டு தரக்கோரி நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் விவசாயி ஒருவர் மனு கொடுத்தார்.
நாமக்கல்:

ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் முனியப்பம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. இவர் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

நான் விவசாயம் செய்து வருகிறேன். கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி தங்களிடம் எனது மனைவி அத்தாயி மற்றும் மகன் பழனிசாமி ஆகியோர் பெங்களூருவில் உள்ள நித்யானந்தா பீடத்திற்கு தியான வகுப்புக்கு சென்று விட்டு, வீடு திரும்பவில்லை என தெரிவித்து இருந்தேன். இதையடுத்து காவல் துறையினர் எனது மகனை மீட்டு என்னிடம் ஒப்படைத்தனர்.

ஆனால் என் மனைவி அத்தாயி பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. அவர் உயிரோடு இருக்கிறாரா என்பதும் தெரியவில்லை. செல்போனிலும் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. என் மனைவி மீது வங்கி கடனாக ரூ.5 லட்சமும், தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.5 லட்சமும், நகை அடமான கடனாக ரூ.30 ஆயிரமும் மற்றும் வெளிநபர் கடனும் உள்ளது.

வங்கி அதிகாரிகள் என்னை நேரில் அழைத்து ஒப்பந்தம் போடவும், பணத்தை திருப்பி செலுத்துமாறும் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். இந்த பணம் முழுவதையும் தியான வகுப்புக்கு சென்ற எனது மனைவி எடுத்துக்கொண்டு செலவு செய்துவிட்டார். இதனால் கடந்த 8 மாத காலமாக நான் கடன் தொல்லையாலும், உணவு இன்றியும் மன உளைச்சலில் உள்ளேன். இனி தற்கொலை செய்வதை தவிர எனக்கு வேறு வழியில்லை. எனவே எனது மனைவியை மீட்டு, நேரில் வரவழைத்து கடனை செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News