செய்திகள்

புதுவை பட்ஜெட் குறித்து முதல்வர் நாராயணசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை

Published On 2018-06-12 09:52 GMT   |   Update On 2018-06-12 09:52 GMT
புதுச்சேரியில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து முதல்வர் நாராயணசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் கடந்த சில ஆண்டுகளாக மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில்லை. அதற்குப் பதிலாக மார்ச் மாதத்தில் அரசின் 4 மாத செலவினங்களுக்கு மட்டும் ஒப்புதல் பெறப்படுகிறது. தொடர்ந்து ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இதேபோல நடப்பு நிதியாண்டிற்கும் மார்ச் 26ந்தேதி அரசின் 4 மாதங்களுக்கான செலவினங்களுக்கு சட்டசபையில் அனுதி பெறப்பட்டது. முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய கடந்த 4-ந்தேதி சட்டசபை கூடியது. ஆனால் மத்திய உள்துறையிடமிருந்து பட்ஜெட்டிற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் சட்டசபை 5-ந்தேதியோடு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை இணை செயலாளரை சந்தித்து பட்ஜெட் தொடர்பாக விளக்கம் அளித்து வந்தார்.

இதனால் ஓரிரு நாளில் பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் கிடைத்துவிடும் என நாராயணசாமி பேட்டியும் அளித்தார். ஆனால் ஒரு வாரமாகியும் இதுவரை பட்ஜெட்டிற்கு அனுமதி கிடைத்ததாக தெரியவில்லை.

இந்நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து சட்டசபையில் உள்ள கமிட்டி அறையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, கமலகண்ணன், தலைமை செயலாளர் அஸ்வினி குமார், அரசு செயலாளர்கள் கந்தவேலு, அன்பரசு, பார்த்திபன், மணிகண்டன், சுந்தரவடிவேலு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News