செய்திகள்

வசதி படைத்தவர்களுக்கு இலவச மின்சாரம் ரத்து ஆகுமா?- தமிழக அரசு பரிசீலனை

Published On 2018-06-11 04:24 GMT   |   Update On 2018-06-11 04:24 GMT
வசதியானவர்களுக்கு இலவச மின்சாரத்தை வழங்குவதை நிறுத்தி, அதன் மூலம் கிடைக்கும் தொகையை வைத்து புதிய மின் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.
சென்னை:

தமிழ்நாட்டில் 100 யூனிட் வரை மின்சாரம் இலவசமாகவும், 500 யூனிட்டுக்கு கீழ் மானிய விலையிலும் மின்வாரியம், மின்சாரம் வினியோகம் செய்கிறது.

இதனால் ஆண்டுக்கு சராசரியாக 3600 கோடி ரூபாய் செலவாகிறது. இந்த தொகையை மின்வாரியத்துக்கு தமிழக அரசு மானியமாக வழங்குகிறது.

மத்திய அரசு, ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தை நிறுத்தி உள்ளது. அதே போல் நிதி நெருக்கடியில் உள்ள மின்வாரியம் வசதியானவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரத்தை நிறுத்த ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதுபற்றி மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஏழை மக்களுக்கு இலவசமாகவும், மானிய விலையிலும் மின்சாரம் வழங்குவதில் தவறில்லை. ஆனால் பல லட்ச ரூபாய் வருவாய் ஈட்டும் வசதி படைத்தவர்கள் உள்பட 2 கோடி வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுவதால் ஆண்டுக்கு 1650 கோடி ரூபாய்க்கு மேல் செலவு ஏற்படுகிறது.

வசதியானவர்களுக்கு இலவச மின்சாரத்தை வழங்குவதை நிறுத்தினால் அதில் கிடைக்கும் தொகையை வைத்து புதிய மின் திட்டங்களை செயல்படுத்தலாம்.


கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்-அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்ற போது கையெழுத்திட்ட 5 கோப்புகளில், 100 யூனிட் இலவச மின்சார திட்டமும் ஒன்று. எனவே இந்த திட்டத்தை நிறுத்த அரசு முடிவெடுக்காது.

ஆனால் கியாஸ் மானியம் வேண்டாம் என பொது மக்கள் தாமாக முன் வந்து தெரிவிப்பது போல் 100 யூனிட் இலவச மின்சாரம் வேண்டாம் என மின்வாரியத்தில் கடிதம் வழங்கினால் அரசு அதை பரிசீலிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். #TNGovernment #ElectricityBoard
Tags:    

Similar News