செய்திகள்

மழை எதிரொலி: சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த மலர்கள் அழுகின

Published On 2018-06-10 17:23 GMT   |   Update On 2018-06-10 17:23 GMT
சிம்ஸ் பூங்காவில் கடந்த மாதம் பூத்து குலுங்கிய அழகிய மலர்கள் மழை காரணமாக அழுகி உதிர்ந்துவிட்டன.
குன்னூர்:

நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால் சுற்றுலா தளங்களும் இயற்கை காட்சி முனைகளும் அதிக அளவில் உள்ளன. நீலகிரி மாவட்டத்தின் தலைநகரான ஊட்டியை அடுத்து குன்னூர் சுற்றுலாவில் முக்கியத்துவம் பெறுகிறது. குன்னூரில் சிம்ஸ் பூங்கா, இயற்கை காட்சி முனைகளான லம்ஸ்ராக், டால்பின் நோஸ் போன்றவைகள் சுற்றுலா பயணிகளால் அதிகம் விரும்பி பார்க்கும் இடங்கள் ஆகும். சிம்ஸ் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் கடைசி வாரத்தில் நடைபெறும் பழக்கண்காட்சியை முன்னிட்டு புதிய மலர் நாற்றுகள் நடவு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு 60- வது பழக்கண்காட்சி கடந்த மே மாதம் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இந்த மலர் கண்காட்சியை முன்னிட்டு கடந்த பிப்ரவரி மாதம் 2½ லட்சம் புதிய மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டன. இவைகள் கடந்த மே மாதம் பழக்கண்காட்சி நேரத்தில் நன்கு பூத்து சுற்றுலா பயணிகளை மகிழ்வித்தது. மே மாதம் கடைசி வாரத்திலிருந்து குன்னூர் பகுதியில் மழை பெய்து வருகிறது. தற்போது காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சிம்ஸ் பூங்காவில் கடந்த மாதம் பூத்து குலுங்கிய அழகிய மலர்கள் மழை காரணமாக அழுகி உதிர்ந்துவிட்டன. மேலும் மழையின் எதிரொலியாக சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. 
Tags:    

Similar News