செய்திகள்
கோப்புப்படம்

புதிய கட்சி அறிவித்தார் திவாகரன் - அம்மா அணி, அண்ணா திராவிடர் கழகமாக மாறியது

Published On 2018-06-10 07:02 GMT   |   Update On 2018-06-10 07:09 GMT
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் என்ற தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். #annadravidarparty
திருவாரூர்:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியும் வயது மூப்பு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்திக் கொள்ள பாஜக போன்ற பெரிய கட்சிகள் முதல் கமல், ரஜினி என அனைவரும் முயற்சித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக அதிமுகவை கைப்பற்ற முயன்று தோல்வியடைந்த சசிகலாவின் சகோதரர் தினகரன் புதிய கட்சி ஒன்றை துவங்கினார். இவரது இந்த புதிய கட்சி அறிவிப்பில் அவருடன் இருந்த நாஞ்சில் சம்பத் உட்பட பலரும் அதிருப்தி அடைந்து அவரை விட்டு விலகினர்.

அதே சமயத்தில், தினகரன் உடனிருந்த அவரது சகோதரர் திவாகரன், பல்வேறு கருத்து வேறுபாடுகளினால் தினகரனை விட்டு விலகுவதாக அறிவித்தார். மேலும், தாம் புதிய கட்சி துவங்குவதாகவும் அறிவித்தார்.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த திவாகரன், தனது கட்சியின் பெயரையும், கட்சி கொடியையும் வெளியிட்டார்.



அண்ணா திராவிடர் கழகம் என தனது கட்சிக்கு பெயரிட்டுள்ளதாகவும், கட்சிக்கான கொடி கருப்பு, சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும். அதன் நடுவில் பச்சை நிறத்தில் நட்சத்திரம் இடம்பெற்றிருக்கும் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கையை விட கட்சிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாக பொதுமக்களும், அரசியல் விமர்சகர்களும் விமர்சித்து வருகின்றனர். #annaadravidarparty
Tags:    

Similar News