செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தேசிய மனித உரிமை ஆணைய விசாரணை இன்று முடிந்தது

Published On 2018-06-07 05:24 GMT   |   Update On 2018-06-07 05:24 GMT
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணைய மேற்கொண்ட விசாரணை இன்றுடன் முடிவடைந்தது. #Sterlite #SterliteProtest #NHRC
தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந்தேதி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறது. இதற்காக தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் டெல்லியில் இருந்து தூத்துக்குடி வந்து விசாரணை நடத்தினர். தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்கள் மற்றும் கலவரத்தில் சேதமான வாகனங்களை அவர்கள் பார்வையிட்டனர்.

துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினரிடமும், காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பலியானவர்கள் குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பி அவர்களை விசாரணை அலுவலகத்திற்கு வரவழைத்து விபரங்களை சேகரித்தனர். மேலும் விசாரணை அலுவலகத்திற்கு வராதவர்களிடம் நேரடியாக வீட்டிற்கு சென்று விபரங்கள் கேட்டனர்.


நேற்று தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் 5-வது நாளாக விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது துப்பாக்கி சூடு நடந்த 22, 23-ந்தேதிகளில் பணியில் இருந்த டி.எஸ்.பி. களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஒரே நாளில் 9 டி.எஸ்.பி.க்கள் தங்களது வாக்குமூலங்களை எழுத்து பூர்வமாக அளித்தனர்.

அதே வேளையில் மனித உரிமை ஆணையத்தில் மற்றொரு குழுவினர் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்களுக்கு மீண்டும் சென்று விசாரணை மேற்கொண்டார்கள். மேலும் கலெக்டர் அலுவலக ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டார்கள்.

இன்று காலை 6-வது நாளாக விசாரணை நடைபெற்றது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து அரசு மருத்துவமனை ஊழியர்கள், டாக்டர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

6 நாட்கள் நடைபெற்ற விசாரணையில் மனித உரிமை ஆணையத்திடம் சுமார் 80-க்கும் மேற்பட்டோர் எழுத்து பூர்வ வாக்குமூலம் அளித்துள்ளனர். 330-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணை இன்றுடன் முடிவடைந்தது.

விசாரணை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும், விசாரணை விபரங்களும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிவடைந்ததையடுத்து தேசிய மனித உரிமை ஆணையக்குழுவினர் இன்று டெல்லி புறப்பட்டு சென்றனர். துப்பாக்கி சூடு சம்பந்தமான முழு விசாரணை அறிக்கையை விரைவில் அவர்கள் மனித உரிமை ஆணையத்திடம் சமர்ப்பிக்க உள்ளனர்.

துப்பாக்கி சூட்டில் மனித உரிமை மீறல்கள் இருப்பதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டிருக்கும் பட்சத்தில் அதற்கான கூடுதல் நடவடிக்கைகளை மனித உரிமை ஆணையம் மேற்கொள்ளும் என தெரிகிறது. #Sterlite #SterliteProtest #NHRC
Tags:    

Similar News