செய்திகள்

கார்களின் கண்ணாடியை உடைத்து 30½ பவுன் நகைகள் திருட்டு

Published On 2018-06-06 22:00 IST   |   Update On 2018-06-06 22:00:00 IST
கரூரில் வெவ்வேறு சம்பவங்களில் கார்களின் கண்ணாடியை உடைத்து 30½ பவுன் தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கரூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தே.அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சித்ரா. இவரது மகன் வினோத்திற்கும்(வயது 25), அதே பகுதியை சேர்ந்த பூங்கொடி மகள் கவிதாவுக்கும்(20) திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் திருமணத்திற்கு நகை வாங்குவதற்காக சித்ரா, அவரது மகன் வினோத் மற்றும் பூங்கொடி, அவரது மகள் கவிதா உள்ளிட்டோர் காரில் கரூருக்கு நேற்று முன்தினம் வந்தனர். பின்னர் கரூர் ஜவகர்பஜாரில் உள்ள ஒரு பிரபல நகை கடையில் சித்ரா உள்ளிட்டோர் நகை வாங்கினர். பின்னர் இரவில் கரூர் கோவை ரோட்டிலுள்ள ஒரு ஓட்டலில் சாப்பிடுவதற்காக காரினை நிறுத்தி விட்டு உள்ளே சென்றனர்.

ஆனால் நகைகளை அவர்கள் எடுக்க மறந்து விட்டனர். இதற்கிடையே சாப்பிட்டு விட்டு திரும்பி வந்து பார்த்தபோது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு அதில் இருந்த 29 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருத்திவிராஜ் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகிறார். இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேபோல் கரூர் அருகே வெள்ளியணை பகுதியை சேர்ந்தவர் வக்கீல் சிவக்குமார். இவர் நேற்று முன்தினம் இரவு, காரில் தனது குடும்பத்துடன் கரூர் வந்தார். பின்னர் கரூர் வடக்கு பிரதட்சணம் ரோடு பகுதியில் காரை நிறுத்திவிட்டு அங்குள்ள ஒரு ஓட்டலுக்கு குடும்பத்துடன் சாப்பிட சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, கார் கண்ணாடி உடைக்கப்பட்டு அதிலிருந்த 1½ பவுன் நகை, ரூ.2 ஆயிரம் மற்றும் செல்போன் ஆகியவை திருட்டு போயிருந்தது. 

இதுகுறித்து கரூர் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிறுத்தப்பட்ட காரின் கண்ணாடியை உடைத்து நகை- பணம் திருடும் கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News