செய்திகள்

பூமி மாசுபடுவதை தடுக்க மரக்கன்று நடுங்கள் - திருப்பூர் கலெக்டர் பேச்சு

Published On 2018-06-06 11:54 GMT   |   Update On 2018-06-06 11:54 GMT
உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு திருப்பூர் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, பூமி மாசுபடுவதை தடுக்க மரக்கன்று நடுங்கள் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள், வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் மன்றங்கள் தேசிய பசுமைப்படை சார்பில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி கலெக்டர் பேசியதாவது,

உலக சுற்றுச்சூழல் தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஒவ்வொருவரும் தங்களது வீடுகளிலும், தங்களது வீட்டை சுற்றியுள்ள பகுதிகளிலும் மற்றும் பள்ளி வளாகத்தினை சுற்றியுள்ள பகுதிகளிலும் மரக்கன்றுகளை நட்டு வைத்து அதனை முறையாக பராமரித்திட வேண்டும்.

மேலும், மரக்கன்றுகளை நட்டு வைப்பதன் மூலம் தேவையற்ற மாசுக்களை நீக்கி சுத்தமான காற்று கிடைப்பதோடு சுற்றுச்சூழல் மாசு அடையாமல் பாதுகாக்கப்படுகிறது.

மரங்கள் மழை வளம் பெருவதற்கு முக்கிய காரணியாக உள்ளது. இயற்கை சம நிலை மேம்படைவதற்கும், புவி வெப்ப மயமாதலை குறைப்பதற்கும் இயற்கை சீற்றங்களை தணிக்கக் கூடிய தன்மையும் மரங்களுக்கு உண்டு.

மேலும், பறவைகள் மற்றும் ஏனைய உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை மரங்கள் உருவாக்குகின்றன. மனிதனின் வாழ்வில் மரங்கள் என்பது இன்றியமையாதவையாகும். மரங்களின் தேவைகளை நல்ல முறையில் அறிந்து கொண்டு பிறருக்கும் அதன் தேவையை எடுத்துரைக்க வேண்டும்.

எனவே, மாணவர்களாகிய நீங்கள் பூமி மாசுபடுவதை தடுத்து பூமிக்கு மேல் உள்ள அனைத்து உயிரினங்களையும் பாதுகாத்திடவும் இயற்கையோடு ஒன்றிட எதிர்கால சந்ததியினருக்காக மரக்கன்றுகளை நாம் நட்டு அதனை முறையாக பராமரித்து வளர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கும் வகையில் முதற்கட்டமாக நான்கு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகளை கலெக்டர் வழங்கினார்.
Tags:    

Similar News